‘நீரா’வை உலக அளவில் பிரபலப்படுத்த வேண்டும் மத்திய மந்திரி பேச்சு

‘நீரா’ பானத்தை உலக அளவில் பிரபலப்படுத்த வேண்டும் என்று மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர் பாதல் கூறினார்.

Update: 2017-08-04 21:45 GMT
சென்னை

டெல்லியில் ‘உலக உணவு இந்தியா-2017’ என்ற தலைப்பில் வருகிற நவம்பர் மாதம் 3-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சி குறித்த கருத்தரங்கம் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது.

இதில் மத்திய உணவு பதப்படுத்துதல் துறை மந்திரி ஹர்சிம்ரத் கவுர் பாதல் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

இந்தியாவில் முதல் முறையாக ‘உலக உணவு இந்தியா’ கண்காட்சி நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் இந்திய உணவுப் பொருட்கள் இடம் பெறும். இதன் மூலம் உலக உணவு பதப்படுத்தும் துறையினர் இந்திய உணவு பதப்படுத்தும் துறையில் முதலீடு செய்ய முன் வருவார்கள்.

உலக அளவில் உணவு உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் இந்தியாவில் உணவுப் பொருட்கள் குறிப்பாக பழங்கள், காய்கறிகள் வீணாவது வேதனைக்குரியது.

நாடு முழுவதும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வரும் விவசாயிகள் நல்வாழ்வுக்கு உணவு பதப்படுத்துதல் துறையால் மட்டுமே ஏதேனும் செய்ய முடியும். உணவு பதப்படுத்துதல் துறையின் வளர்ச்சி காரணமாக விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு தேவை அதிகரிக்கும்.

இன்றைக்கு மக்கள் உடல் ஆரோக்கியம் பற்றி சிந்திக்க தொடங்கி விட்டனர். இயற்கை உணவை நாடுகின்றனர். எனவே தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் ‘நீரா’ பானத்தை நாம் உலக அளவில் பிரபலப்படுத்த வேண்டும்.

இந்தியாவின் சில்லரை விற்பனை சந்தை 600 பில்லியன் அமெரிக்க டாலராக இன்றைக்கு உள்ளது. இதில் 70 சதவீதம் உணவு பொருட்களுக்கான சந்தை ஆகும். அடுத்த 6 ஆண்டுகளில் இந்தியர்கள் உணவிற்காக செலவிடுவது இரட்டிப்பாக்கும் என்று கருதப்படுவதால் உணவு பதப்படுத்துதல் துறை முக்கியமானதாக கருதப்படுகிறது. விளைப் பொருட்கள் வீணாகாமல் தடுக்க உணவு பதப்படுத்துதல் துறையின் கட்டமைப்பு பலப்படுத்தப்பட வேண்டும்.

வளர்ந்த நாடுகளில் உணவு தட்டுகளில் வீணாகிறது. நம் நாட்டில் உணவுப் பொருட்கள் அறுவடை நிலையில் வீணாகிறது. மிகப்பெரிய முதலீடு தேவைப்படும் உணவுப் பதப்படுத்துதல் துறைக்கு ஊக்கம் அளிக்க அரசு பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விளைநிலங்களுக்கு அருகில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக விவசாயத்துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்