ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி புதிய மனு தாக்கல்

ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருள் வழங்கியது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி ஐகோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2017-08-03 22:30 GMT
சென்னை,

ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் நடைபெற இருந்தது. அப்போது, அ.தி.மு.க. (அம்மா) அணியின் சார்பில் போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது ஆட்கள், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வாரி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள், தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக ரூ.90 கோடியை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட பல அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டதற்கான ஆதார ஆவணங்கள் சிக்கின. இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் அளித்த அறிக்கையின் அடிப்படையில், ஆர்.கே.நகர் தேர்தலை, இந்திய தேர்தல் ஆணையம் தள்ளிவைத்து, கடந்த ஏப்ரல் 10-ந் தேதி உத்தரவிட்டது.

இதன்பின்னர், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த டி.டி.வி. தினகரன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதற்கிடையில், தேர்தல் ஆணையம் உத்தரவிட்டும், இதுவரை அமைச்சர்கள் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று கூறி சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் வைரக்கண்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறி, அந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையை கோர்ட்டில் இந்திய தேர்தல் ஆணையம் வக்கீல் தாக்கல் செய்தார். ஆனால், அந்த முதல் தகவல் அறிக்கையில் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் பெயர்கள் எதுவும் இல்லை.

இந்த வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மற்றொரு மனுவை வக்கீல் வைரக்கண்ணன் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில், அபிராமபுரம் போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்கள் எதுவும் இல்லை.

ஆனால், தேர்தல் அதிகாரி கொடுத்த புகாரில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் பெயர்கள் உள்ளன. எனவே, இந்த பணப்பட்டுவாடா வழக்கை தமிழக போலீசார், நேர்மையாக விசாரிக்கமாட்டார்கள். அமைச்சர்களுக்கு ஆதரவாகத்தான் போலீசார் செயல்படுவார்கள்.

மேலும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உள்துறையின் அமைச்சராக இருப்பதால், போலீஸ் துறை அவரது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அதனால், விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி முதல்-அமைச்சருக்கு, போலீசாரால் சம்மன் அனுப்ப முடியாது. எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது.

மேலும் செய்திகள்