புலன் விசாரணையில் காலதாமதத்தை தவிர்க்க மரண வாக்குமூலத்தை நேரடியாக போலீசுக்கு வழங்கினால் என்ன? ஐகோர்ட்டு கேள்வி

புலன் விசாரணையில் காலதாமதத்தை தவிர்க்க மரண வாக்குமூலத்தை நேரடியாக போலீசுக்கு வழங்கினால் என்ன? ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.;

Update: 2017-08-02 21:30 GMT
சென்னை,

புலன் விசாரணையில் காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக, மரண வாக்குமூலம், ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்யும் மாஜிஸ்திரேட்டு, அதில் ஒரு நகலை போலீசாருக்கு நேரடியாக வழங்கினால் என்ன? என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட திருப்பூரை சேர்ந்தவர், ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் 164–ன் கீழ், பாதிக்கப்பட்ட பெண், மாஜிஸ்திரேட்டிடம் கொடுத்த வாக்குமூலத்தை நீதிபதி கேட்டார்.

அதற்கு அரசு தரப்பு வக்கீல், வாக்குமூலத்தை பெற்ற மாஜிஸ்திரேட்டு, அந்த அறிக்கையை இதுவரை தரவில்லை என்று கூறினார். இதற்கு, ‘‘வாக்குமூலம் அறிக்கையை தாக்கல் செய்ய ஏன் இவ்வளவு காலதாமதம்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் என்.ரமேஷ், ‘மரண வாக்குமூலம், ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் அடையாள அணிவகுப்பு ஆகியவற்றை ஒரு மாஜிஸ்திரேட்டு பதிவு செய்தால், அது தொடர்பான அறிக்கையை தலைமை மாஜிஸ்திரேட்டுக்கு அவர் அனுப்பி வைத்து விடுவார். தலைமை மாஜிஸ்திரேட்டிடம் இருந்து, வழக்கு விசாரிக்கப்படும் கோர்ட்டின் மாஜிஸ்திரேட்டுக்கு இந்த அறிக்கை அனுப்பி வைக்கப்படும். அந்த கோர்ட்டில் இருந்துதான், வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் விண்ணப்பம் செய்து, அந்த அறிக்கையின் நகலை பெறவேண்டியதுள்ளது. இதனால், இந்த அறிக்கையை, இன்ஸ்பெக்டர் பெற ஒரு மாத காலம் வரை ஆகும்’ என்று விளக்கம் அளித்தார்.

இதையடுத்து நீதிபதி, ‘இந்த அறிக்கையை பெற, இவ்வளவு காலதாமதம் ஆகும்போது, போலீசாரின் விசாரணையிலும் காலதாமதம் ஏற்படத்தானே செய்யும்?’ என்று கருத்து தெரிவித்தார்.

பின்னர், ஜாமீன் கேட்டு மனுதாரருக்கு தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

அதைத் தொடர்ந்து, ‘மரண வாக்குமூலம், ஒப்புதல் வாக்குமூலம் உள்ளிட்ட அறிக்கைகளை போலீசார் பெறுவதற்கு ஏற்படும் காலதாமதம் குறித்து, ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார். இதன் அடிப்படையில், அதுதொடர்பான வழக்கை தலைமை நீதிபதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.என்.பிரகாஷ் ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது, மாநில தலைமை குற்றவியல் வக்கீல் ராஜரத்தினம், வக்கீல்கள் என்.ரமேஷ், அபுடுகுமார் உள்பட பலர் ஆஜராகி வாதிட்டார்கள்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ‘மரண வாக்குமூலம், ஒப்புதல் வாக்குமூலம், அடையாள அணிவகுப்பு உள்ளிட்டவைகளை பதிவு செய்யும் மாஜிஸ்திரேட்டு, அதுதொடர்பான அறிக்கையை தலைமை மாஜிஸ்திரேட்டுக்கு அனுப்பி வைக்கும்போது, அந்த அறிக்கையின் நகலை, வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டருக்கு, அவரே நேரடியாக வழங்கினால் என்ன?’ என்று கேள்வி எழுப்பினார்கள்.

பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்