தி.மு.க. மீது தவறான குற்றச்சாட்டை தமிழக அரசு சுமத்துகிறது மு.க.ஸ்டாலின் பேச்சு

தி.மு.க. மீது தவறான குற்றச்சாட்டை தமிழக அரசு சுமத்துகிறது என்று கதிராமங்கலம் போராட்ட களத்தில் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.;

Update: 2017-07-31 23:45 GMT
தஞ்சாவூர்,

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிவரும் பொதுமக்களை நேற்று சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். போராட்டக்காரர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

கதிராமங்கலம் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு கழகத்துக்கு குத்தகை உரிமையை அ.தி.மு.க. ஆட்சி வழங்குகின்ற நேரத்தில் நியாயமாக இந்த பகுதி மக்களுடைய பிரச்சினைகளை அறிந்து கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக, விவசாயிகளின் கருத்துகளை அறிந்திருக்க வேண்டும். அவைகளை எல்லாம் கேட்டு, அதன்பிறகு குத்தகை உரிமையை வழங்கியிருக்க வேண்டும். அந்த நிலையை எடுக்காததால் ஏற்பட்ட விளைவு என்ன? குழாய் வெடித்து, எண்ணெய் கசிவு ஏற்பட்டு வயல்களெல்லாம் பாதிக்கக்கூடிய ஒரு ஆபத்து ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து, கடந்த மே 19-ந் தேதி முதல் நீங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆளுங்கட்சி சார்பில், காவல்துறையை பயன்படுத்தி நடத்தப்பட்ட கொடுமையான சம்பவங்கள், பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கொடுமைகள் இவையெல்லாம் இங்கு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆட்சி பொறுப்பில் இருப்பவர்கள் முறையாக உங்களை அழைத்துப் பேசிட வேண்டும். இல்லையென்றால் அவர்கள் உங்களை வந்து சந்தித்து, உங்களுடைய பிரச்சினை என்னவென்று கேட்கின்ற தன்மையையாவது பெற்றிருக்க வேண்டும். தமிழக அமைச்சர்களோ அல்லது முதல்-அமைச்சரோ, இல்லை தலைமைப் பொறுப்பில் இருக்கிற தலைமை செயலாளரோ அல்லது இந்த துறைக்கு என்று இருக்கின்ற செயலாளர்களோ உங்களை வந்து சந்தித்து, உங்களுடைய பிரச்சினைகளை கேட்டு, அதற்கு பிறகு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, அந்த பிரச்சினைகளில் அவர்கள் தலையிட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரையில் தலையிடவில்லை.

தி.மு.க. பற்றி அ.தி.மு.க. அரசு தவறாக சொல்கிறது. கதிராமங்கலம் பிரச்சினைக்கு தி.மு.க.வும் காரணம் என்று தவறான பிரசாரத்தில் சிலர் ஈடுபட்டுள்ளனர். தி.மு.க. ஆட்சியின்போது மத்திய அரசு இங்கு ஆய்வு செய்தது. மக்களுடைய கருத்துகளை கேட்டு, விவசாயிகளின் உணர்வுகளை புரிந்துகொண்டு, அதன் பிறகு திட்டத்தை செயல்படுத்தும் முயற்சிக்கான ஆய்வில் ஈடுபடும் நிலைதான் தி.மு.க. ஆட்சியில் இருந்தது.

ஆனால், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு, குத்தகை உரிமையை வழங்கியிருக்கிறது என்றால், கதிராமங்கலம் பகுதி மக்களுக்கு யார் துரோகம் செய்தார்கள் என்பதை நான் இதைவிட எப்படி எடுத்துச் சொல்லமுடியும்? ஒருவேளை தி.மு.க. இந்த திட்டத்தை அனுமதித்து இருந்தாலும், ஏன் அவர்களால் இந்த திட்டத்தை ரத்துசெய்ய முடியவில்லை, அனுமதி மறுக்கவில்லை. தி.மு.க. ஆட்சியில் ஆய்வு செய்வதற்கு மட்டுமே அனுமதி அளித்தோம். ஆனால், இந்த ஆட்சியில் குத்தகை கொடுக்கப்பட்டு உள்ளது.

உங்களுடைய போராட்டம் நிச்சயம் வெற்றிபெறும். காரணம், இந்த ஆட்சி இன்றோ, நாளையோ, நாளை மறுநாளோ என்ற நிலையில் தான் தொங்கிக் கொண்டிருக்கிறது. ஊசலாடி வருகிறது. மத்திய அரசின் தயவில், அவர்களுடைய காலடியில் விழுந்துகிடக்கும் மோசமான நிலையில் ஆட்சி நடக்கிறது. மத்திய அரசு எதைச் சொல்கிறதோ, அதை அப்படியே ஏற்று செயல்படும் ஒரு அடிமைத்தன ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கிறது.

இரு தினங்களுக்கு முன்பாக பிரதமர் மோடி முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மணி மண்டபத்தை ராமேசுவரத்தில் திறந்து வைத்துவிட்டு சென்றார். அங்கு பகவத்கீதை வைக்கப்பட்டுள்ளது. நியாயப்படி அங்கு திருக்குறள் புத்தகத்தை வைத்திருந்தால் நாம் பாராட்டி இருக்கலாம், அப்துல் கலாமின் பேரன், பைபிள் மற்றும் குரான் புத்தகங்களை அங்கு வைத்திருக்கிறார். அவை உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. அதனைத் தட்டிக்கேட்க இயலாத ஆட்சியாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு ஆட்சி நடக்கிறது.

விரைவில் தி.மு.க. ஆட்சி உருவாகும் நேரத்தில் நிச்சயமாக உங்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு, உங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படும், அதுவரையில் போராடுவோம். உங்களுக்கு தி.மு.க. துணைநிற்கும். யாருடைய பொய் பிரசாரத்தையும் நீங்கள் நம்ப வேண்டியதில்லை.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். 

மேலும் செய்திகள்