சென்னை துறைமுகம்–மதுரவாயல் பறக்கும் சாலை வழித்தடம் மாற்றம்

சென்னை துறைமுகம்–மதுரவாயல் பறக்கும் சாலை வழித்தடம் மாற்றப்படுகிறது.

Update: 2017-07-22 23:15 GMT

சென்னை,

4 மாதத்தில் திட்ட அறிக்கை தயாரிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

சென்னை துறைமுகத்துக்கு வரும் வாகனங்கள் மாநகர போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் நேரடியாக துறைமுகத்தை சென்றடைவதற்காக சென்னை துறைமுகம்–மதுரவாயல் இடையே 19 கிலோ மீட்டர் தூரத்துக்கு நான்கு வழி பறக்கும் சாலை திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த பறக்கும்சாலை திட்டத்தின் வழித்தடம் மற்றும் வடிவமைப்பை மாற்றுவது தொடர்பாக மத்திய அரசு நியமித்த நிபுணர் குழு அளித்த பரிந்துரைகளை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க ஆலோசகர்களை நியமிக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி 4 மாதங்களுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்மூலம் 1.47 ஹெக்டேர் தனியார் நிலம் கையகப்படுத்தப்பட்டு, 458 வணிக நிறுவனங்களும், 7,400 குடியிருப்புகளும் மாற்ற வேண்டியிருக்கும். பெரியார் பாலத்தில் இருந்து துறைமுக நுழைவாயிலுக்கு இடையே ராணுவம் மற்றும் கடற்படைக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்துவதில் சில பிரச்சினைகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

மாற்றப்பட்ட வழித்தடமானது துறைமுக நுழைவாயில் (எண் 10) அருகில் தொடங்கி கூவம் ஆறு வழியாக கோயம்பேடு வரையும், கோயம்பேடு சந்தை அருகில் உயர்த்தப்பட்ட சாலையாக மெட்ரோ ரெயில் பாதையை கடந்து மதுரவாயலில் முடிவடையும். பொது போக்குவரத்து வாகனங்களுக்கும் இந்த சாலையில் நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள் காமராஜர் சாலை (வெளியே), சிவானந்தா சாலை (உள்ளே), கல்லூரி சாலை (உள்ளே) மற்றும் ஸ்பர்டேங்க் சாலை (வெளியே) ஆகிய இடங்களில் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கோயம்பேடு – மதுரவாயல் வரையிலான 4 கிலோ மீட்டர் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இருபுறமும் சர்வீஸ் சாலைகளுடன் கூடிய எட்டு வழிச்சாலை வசதியும் கிடைக்கும். தற்போதுள்ள புதிய வரிவிகிதப்படி இந்த பறக்கும் சாலைக்கும் நுழைவு வரி நிர்ணயிக்கப்படும். 3 ஆண்டுகளுக்குள் இந்த திட்டம் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்