கமல்ஹாசன் எவ்வளவு வரி கட்டினார் ஆய்வு செய்யட்டுமா? மிரட்டும் அமைச்சர் வேலுமணி!

கமல்ஹாசன், தான் நடித்த படங்களுக்கு எவ்வளவு வரி கட்டினார் என்பதை அவர் விளக்குவாரா? ஆய்வு செய்யட்டுமா? என அமைச்சர் வேலுமணி ஆவேசமானார்

Update: 2017-07-15 07:38 GMT
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக எழுந்த சர்ச்சை குறித்து, அண்மையில் நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்தார். அப்போது, செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த கமல், தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் அதிகரித்துவிட்டதாகக் குற்றம்சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் ஊழல் அதிகரித்துவிட்டதாகப் பொதுவாகப் புகார் கூறக் கூடாது. எந்தத் துறையில் ஊழல் இருக்கிறது என்று நடிகர் கமல் குறிப்பிட்டுக் கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதனிடையே, கமல்ஹாசனிடம், ஜெயக்குமாரின் பதிலைச் சுட்டிக்காட்டி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளித்த கமல், தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் இருப்பதாக, மேலும் தெரிவித்தார்.

இது குறித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

நடிகர் கமலஹாசன் இப்போது தான் தமிழகத்தில் இருக்கிறாரா? இதற்கு முன்பெல்லாம் எங்கே சென்றார். முன்பெல்லாம் அவர் இவ்வாறு பேசுவது கிடையாது.  ஆனால் சமீப காலமாக ஆதாரம் இல்லாமல் பேசி வருகிறார். சினிமாவுக்கு கேளிக்கை வரி பிரச்சினை தொடர்பாக பேசுவதற்கு திரைதுறையினர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு முதல்-அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இது கமலஹாசனுக்கும் தெரியும். ஆனால் அவர் எந்த ஆதாரமும் இல்லாமல் தமிழக அரசை குறை கூறிவருகிறார். ஊழல் குறித்து அவர் நிரூபிக்க தயாரா? ஆதாரம் இருக்கிறதா?  ஆதாரம் இல்லாமல் எதுவும் பேசக்கூடாது. எனவே அ.தி.மு.க. அரசை குறை கூறுவதை கமலஹாசன் இத்துடன் நிறுத்தி கொள்ள வேண்டும். அ.தி.மு.க. அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது.

தமிழக அரசின் திட்டங்களுக்கு டெல்லி சென்று கேட்டவுடன் மத்திய அரசு 1500 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. தமிழகத்தின் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. எனவே கமலஹாசன் இனியாவது விபரங்கள் தெரிந்து  கொண்டு பேசவேண்டும். மேலும் கமலஹாசன் இதுவரை அவர் நடித்த படங்களுக்கு எவ்வளவு வரி கட்டினார் என்பதை அவர் விளக்குவாரா? ஆய்வு செய்யட்டுமா? இவ்வாறு அவர் பேசினார்

மேலும் செய்திகள்