தமிழகம் பாலைவனம் போல காட்சி அளிக்கிறது ‘தண்ணீர் மனிதன்’ ராஜேந்திர சிங் பேட்டி

ஆறுகள் வறண்டு கிடப்பதால் தமிழகம் பாலைவனம் போல காட்சி அளிப்பதாக ‘தண்ணீர் மனிதன்’ ராஜேந்திர சிங் கூறினார்.;

Update: 2017-06-30 22:30 GMT
சென்னை,

உலக அளவில் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும், ‘ஸ்டாக்ஹோம் நீர் பரிசு’ பெற்றவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜேந்திர சிங். ‘தண்ணீர் மனிதன்’ என்று அழைக்கப்படும் இவர், தமிழகத்தை வறட்சி இல்லாத மாநிலமாக மாற்றும் முனைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

தாமிரபரணி, வைகை, காவிரி, தென்பெண்ணை, பாலாறு உள்ளிட்ட ஆறுகளை அவர் பார்வையிட்டார். தனது பயணத்தின்போது விவசாயிகள், தண்ணீர் நல ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரை சந்தித்தார். இந்த பயணத்தின் அனுபவம் குறித்தும், எதிர்கால தண்ணீர் சேமிப்பின் அவசியம் குறித்தும் ராஜேந்திர சிங் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் இருந்து மே 28-ந் தேதி எனது பயணத்தை தொடங்கி, தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய ஆறுகளை பார்வையிட்டேன். ஆறுகள் வறண்டு கிடப்பதால் தமிழகம் பாலைவனம் போல காட்சி அளிக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தை விட இங்கு 6 மடங்கு அதிகமாக மழை பெய்கிறது. ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தில் குடிநீர் பஞ்சம் இல்லை.

ஆண்டுக்கு சராசரி மழை பொழியும் தமிழ்நாடு, குடிநீர் பஞ்சத்தில் சிக்கி இருக்கிறது. தமிழகத்தில் தண்ணீர் மேலாண்மை மிகவும் கீழ்நிலையில் இருப்பதே இதற்கு காரணம். மழைநீர் சேகரிப்பு திட்டங்கள் பெயரளவுக்கே இங்கு செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி மனிதர்களால் உருவாக்கப்படும் செயற்கையான ஒன்று.

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, வணிகமயமாக்கல், எந்திரமயமாக்கல், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவு ஆறுகளில் கலப்பது, ஆற்று மணலை எடுத்து தமிழகத்துக்கு மட்டும் இன்றி, அண்டை மாநிலங்களுக்கும் கடத்துவதே இதற்கு காரணம். மணல், தண்ணீர் கொள்ளையை தமிழக அரசு தடுக்காவிட்டால் தாமிரபரணி, வைகை, காவிரி, தென்பெண்ணை, பாலாறு ஆகிய 5 ஆறுகள் அழிந்து போகும் நிலை உருவாகும்.

தமிழகத்தில் ஆற்று மணல் விரையத்தை தடுக்காவிட்டால் 52 உபரிநீர் வடிநில படுகைகளும், தமிழகம் முழுவதும் மூதாதையர்களால் பாதுகாக்கப்பட்ட 38,720 பாசன குளங்களும், நீர்நிலைகளும் மறைந்து விடும்.

தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள இந்த காலக்கட்டத்திலும் அன்னிய நாட்டு குளிர்பான கம்பெனிகளுக்கு தண்ணீர் வழங்குவதை அரசு நிறுத்த வேண்டும். மணல் வியாபாரத்தையும் நிறுத்திவிட்டு வரலாறு காணாத வறட்சியில் இருந்து தமிழர்களை காக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஆற்று படுகைகளில் இருந்து மணல் எடுப்பதில் அரசியல்வாதிகளின் தலையீடு அதிகமாக இருக்கிறது. தமிழக ஆறுகளின் சூழல் தேவைக்கான குறைந்தபட்ச நீரோட்டத்தை மீட்டு எடுக்கும் 10 ஆண்டு திட்ட வரையறை செய்திடும் வகையில், தண்ணீர் பாதுகாப்புக்கான மக்கள் பாராளுமன்றம் 18-ந் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது. இதில் தொடர் போராட்டம் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்