பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய திட்டம் அறிமுகம்

பெருங்களத்தூரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய போலீசார் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

Update: 2017-06-28 22:15 GMT
சென்னை,

இது தொடர்பாக போகுவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை போலீஸ் கமிஷனராக ஏ.கே.விஸ்வநாதன், பொறுப்பேற்ற பிறகு போக்குவரத்து நெரிசலை சீராக்குவதற்கும், விபத்துக்களை குறைப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

காந்திரோடு வழியாக வரும் வாகன ஓட்டிகள் எளிதாக வண்டலூர் மார்க்கமாக செல்வதற்கு, இடது பக்கம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

பெருங்களத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வரும் பேருந்துகள், எளிதாக ஜி.எஸ்.டி. சாலையில் செல்வதற்கும், தகுந்த இடவசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜி.எஸ்.டி. ரோட்டில் உள்ள இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது.

பெருங்களத்தூர், காந்திரோடு வழியாக வரும் வாகனங்களில், இருசக்கர வாகனங்கள் மட்டும் மாலை 6 மணிவரை ஜி.எஸ்.டி. ரோடு குறுக்காக கடந்து செல்ல அனுமதிக்கப்படும். ஆட்டோக் கள் காலை 7.30 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 3.30 மணி முதல் 5 மணி வரையிலும் ஜி.எஸ்.டி. ரோடு குறுக்கே கடந்து செல்வதற்கு அனுமதிக்கப்படும். ஆம்புலன்சு வாகனங்கள் செல்லலாம்.

பஸ், கார், லாரி போன்ற வாகனங்கள் குறுக்காக கடந்து செல்ல அனுமதி இல்லை. மேலும் ஏரிக்கரை சந்திப்பில் வாகனங்கள் எளிதாக கடந்து செல்லவும் திரும்பி செல்வதற்கும் சாலையை சமன் செய்து தார்சாலை போடப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களால் பெருங்களத்தூர் சந்திப்பில் இருந்த போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்