சட்டசபையில் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் நேரில் வலியுறுத்தல்

தமிழக சட்டசபையில் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் நேரில் வலியுறுத்தினார்.

Update: 2017-06-18 00:15 GMT
சென்னை,

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற பணம் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் வழங்கப்பட்டதற்கு ஆதாரம் என்று கூறி வீடியோவை ஆங்கில தொலைக்காட்சி வெளியிட்டது.

இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.

இந்த சூழலில் மாலை 5.50 மணி அளவில் தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு வந்தார்.  அவர்கள் 6 மணி அளவில் தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினர்.  இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நீடித்தது. இந்த சந்திப்பின்போது ஆங்கில தொலைக்காட்சியில் வெளியான வீடியோ ஆதாரத்தை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும், இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கவர்னரிடம் வலியுறுத்தினார்.

மேலும் தான் கொண்டு வந்த சி.டி. ஆதாரத்தையும் அவர் கவர்னரிடம் வழங்கினார். அவருடன் எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், பொன்முடி எம்.எல்.ஏ. ஆகியோரும் வந்தனர்.

மேலும் செய்திகள்