தடுப்பணைகள் கட்டுவது தொடர்பாக பேச்சுவார்த்தை தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும் என நிரூபித்தால் பணியை நிறுத்த தயார்

பள்ளிப்பட்டு அருகே ஆந்திர மாநில அரசு தடுப்பணைகள் கட்டுவது தொடர்பாக தமிழக, ஆந்திர மாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Update: 2017-06-15 23:30 GMT
பள்ளிப்பட்டு,

பள்ளிப்பட்டு அருகே ஆந்திர மாநில அரசு தடுப்பணைகள் கட்டுவது தொடர்பாக தமிழக, ஆந்திர மாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும் என நிரூபித்தால் பணியை நிறுத்த தயாராக இருப்பதாக ஆந்திர மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.

தடுப்பணைகள்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது வெளியகரம் கிராமம். இங்குள்ள பெரிய ஏரிக்கு ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புல்லூரில் பாயும் குசா என்ற ஆற்றில் இருந்து வரத்து கால்வாய் மூலம் தண்ணீர் வருகிறது.

இந்த தண்ணீர் மூலம் வெளியகரம், இருதலைவாரிபட்டடை, வெளியகரம் காலனி ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாய நிலங்கள் பயன் பெற்று வந்தது. இந்நிலையில் இந்த ஏரிக்கு வரும் வரத்து கால்வாய் மீது நெலவாய் என்ற இடத்தில் 5 இடங்களில் ரூ.28 லட்சம் செலவில் ஆந்திர அரசு தடுப்பணைகள் கட்டும் பணியை தொடங்கியது.

பேச்சுவார்த்தை

இதுபற்றி அறிந்த 3 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவர் ராஜேஸ்வரி ரவீந்திரநாத் தலைமையில் 13-ந்தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் தமிழக, ஆந்திர மாநில போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். மேலும் இது தொடர்பாக ஆந்திர, தமிழக அதிகாரிகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி நெலவாயிலில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. இதில் தமிழக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் வெங்கடேசலு, திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசந்திரன், பள்ளிப்பட்டு தாசில்தார் வெங்கடேசன், விவசாயிகள் சார்பில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரவீந்திரநாத் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆந்திர மாநிலம் சார்பில் டிவிஷன் என்ஜினீயர் வெங்கட சிவா ரெட்டி, தாசில்தார் வெங்கட லட்சுமியம்மாள், இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் பங்கேற்றனர். தடுப்பணை கட்டுவதால் வெளியகரம் பகுதியில் குளங்கள், கிணறுகள் தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்படும் என்று தமிழக அதிகாரிகள் வாதிட்டனர். பாதிப்பும் ஏற்படாது என ஆந்திர மாநில அதிகாரிகள் கூறினர்.

நிறுத்த தயார்

பாதிப்பு ஏற்படும் என்பதை தாங்கள் நிரூபிக்க கால அவகாசம் தேவை என தமிழக அதிகாரிகள் கேட்டனர். தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும் என நிரூபித்தால் தடுப்பணை கட்டுவதை நிறுத்தி விடுவதாக ஆந்திர மாநில அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தங்களிடம் உள்ள ஆவணங்களை அவர்கள் தமிழக அதிகாரிகளுக்கு காட்டினர்.

இதை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு பின்னர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்