பெண்களை மயக்கமடைய செய்து கொள்ளை: கைவரிசை காட்டுவது ஈரான் கொள்ளை கும்பலா? பரபரப்பு தகவல்கள்
சென்னையில் கடந்த சில நாட்களாக பெண்களை மயக்கமடைய செய்து நகை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.;
சென்னை,
இதன் பின்னணியில், ஈரான் கொள்ளை கும்பல் இருக்கலாம் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
நகை கொள்ளைசென்னை விருகம்பாக்கத்தில் ஜவுளிக்கடை நடத்தி வருபவர் பத்மா (வயது 50). இவரது கடைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்த மர்ம நபர், 6 கைக்குட்டைகள் வாங்கினார். அதற்கான பணத்தை பத்மாவிடம் அவர் கொடுத்த நேரத்தில், பத்மா திடீரென மயக்கம் அடைந்தார்.
சற்று நேரம் கழித்து பத்மா கண்விழித்து பார்த்தபோது, அவர் அணிந்திருந்த 10 பவுன் நகைகளை காணவில்லை. கைக்குட்டை வாங்கிய நபரையும் காணவில்லை. இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயக்கம்இந்த நிலையில், 8–ந்தேதி சென்னை சைதாப்பேட்டையில் மளிகை கடை நடத்தி வரும் ரஞ்சனாவிடம் (45), தொழில் வளர்ச்சியடைய வீட்டில் பூஜை செய்வதாக கூறிய ஆசாமி, பூஜை செய்வது போல் நடித்து, அவரிடம் இருந்த 6 பவுன் தங்க வளையல்களை ஏமாற்றி எடுத்துச்சென்று விட்டார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், நேற்று முன்தினம் இரவு அதுபோன்ற ஒரு சம்பவம் ஏழுகிணறு பகுதியில் நடந்துள்ளது. ஏழுகிணறு நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்த சுந்தரி பாய் (60) என்ற பெண், வால்டாக்ஸ் சாலையில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு நேற்று முன்தினம் இரவு வந்த வடமாநில இளைஞர் ஒருவர், தொழில் வளர்ச்சிக்காக பூஜை நடத்துவதாக கூறியுள்ளார்.
பின்னர், ஆசி வழங்குவது போல் சுந்தரி பாயின் கையை அவர் பிடித்தபோது, சுந்தரி பாய் மயக்கம் அடைந்தார். கண் விழித்து பார்க்கும்போது, அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்கச்சங்கிலி, வளையல்களை காணவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து ஏழுகிணறு போலீசில் புகார் செய்துள்ளார். போலீசாரும் ஏற்கனவே நடந்த 2 சம்பவங்களுடன் இணைத்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
ஈரான் கொள்ளை கும்பலா?அடுத்தடுத்து நடந்துவரும் இதுபோன்ற சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். வடமாநில கொள்ளையர்கள் தான், இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, ஈரான் கொள்ளை கும்பலாக இருக்குமோ என்று போலீசார் கருதுகின்றனர்.
அதாவது, ஈரான் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்தவர்கள், மராட்டிய மாநிலம் மும்பையில் தங்கியுள்ளனர். தற்போது, அங்கு சுமார் 400 குடும்பத்தினர் உள்ளனர். இந்த கும்பலை சேர்ந்தவர்கள் தான், வெளி மாநிலங்களுக்கு சென்று, இதுபோன்று பூஜை நடத்துவதாக கூறி, பெண்களை மயக்கம் அடைய செய்து, நகைகளை கொள்ளையடித்து சென்றுவிடுவதாக கூறப்படுகிறது.
கடந்த 2013–ம் ஆண்டு இதுபோன்று கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்த நேரத்தில், தனிப்படை போலீசார் அங்கு சென்று சிலரை கைது செய்தனர். அதன்பின்னர், கொள்ளை சம்பவங்கள் சற்று குறைந்தன. ஆனால், தற்போது மீண்டும் தலைதூக்கி வருவது போலீசாருக்கு சவாலாக விளங்குகிறது.
விடை தெரியாத கேள்விபெண்களை மயக்கமடைய செய்ய மயக்க மருந்து எதுவும் பயன்படுத்துகிறார்களா? அல்லது வசியம் செய்கிறார்களா? என்பதே போலீசாருக்கு விடை தெரியாத கேள்வியாக உள்ளது.
எனவே, இதுகுறித்து போலீசார் தீவிர கவனம் செலுத்தி, ஈரான் கொள்ளை கும்பலை கைதுசெய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.