2–வது முதலீட்டாளர்கள் மாநாட்டால் மக்கள் பணம் விரயம் ஆகும்; மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

2–வது முதலீட்டாளர்கள் மாநாட்டால் மக்கள் பணம் விரயம் ஆகும் என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2017-06-06 20:56 GMT

சென்னை,

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

2–வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு

‘‘இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும்’’ என்று முதல்–அமைச்சர் அறிவித்திருக்கிறார். ஏற்கனவே 3 முறை தள்ளிப்போட்டு நடத்தப்பட்ட முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் பலனே இன்னும் தமிழக மக்களுக்கு கிடைக்கவில்லை.

200 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து, அ.தி.மு.க.வின் கட்சி மாநாட்டினைப் போல முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி 11 நாடுகளிலும், 16 நகரங்களிலும் ‘‘சாலை நிகழ்ச்சிகள்’’ நடத்தியது மட்டுமே நடந்தேறி இருக்கின்றன. அந்த மாநாட்டில் 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் கிடைக்கும் வகையில் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக 10–9–2015 அன்று அறிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தங்களின்படி 30 நாட்களுக்குள் முதலீடுகளைப் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டது.

நகராத தேர்

ஆனால் இன்றைக்கு 25 மாதங்கள் உருண்டோடிய பிறகும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்கள், நகராத தேர் போல் நிலைகுத்தி நிற்கின்றன. 3 முதல்–அமைச்சர்கள் மாறியும் இன்றுவரை 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் தமிழகத்திற்கு வந்து சேரவில்லை. புதிய தொழிற்சாலைகளும் துவங்கப்படவில்லை.

அதற்கு மாறாக முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பிறகுதான் ‘கியா’ மோட்டார்ஸ் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள், அ.தி.மு.க. அரசின் ஊழல் ராஜ்யத்தை சமாளிக்க முடியாமல், தமிழகத்தை விட்டு ஓடும் நிலை உருவாகிவிட்டது. இந்நிலையில், மீண்டும் ஒரு உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்ற அறிவிப்பு ‘‘ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது’’ என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.

பெரும்பான்மை இல்லை

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை எதிர்த்து இன்றைக்கு அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்குள் 3–வது அணி உருவாகிவிட்டது. சிறையில் இருந்து வெளிவந்தவர் தலைமையில் 12–க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ‘‘எதிர்ப்பு அரசியல்’’ துவங்கிவிட்டார்கள். ஏற்கனவே 11 சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஐக்கியமாகிவிட்டார்கள்.

இந்த எண்ணிக்கைகளை கூட்டிப்பார்த்தால் சட்டமன்றத்தில் அறுதி பெரும்பான்மைக்கான 117 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு முதல்–அமைச்சருக்கு இன்றைய தேதியில் இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.

மக்கள் பணம் விரயம்

தமிழகத்தில் பொறுப்பில் இருக்கின்ற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு இன்றைக்கு நிலையற்ற அரசாகிவிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ‘‘இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு’’ நடத்தப்போகிறோம் என்பதும், அந்த மாநாட்டை நம்பி முதலீட்டாளர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வருவார்கள் என்பதும், வாக்களித்த மக்களின் காதில் பூ சுற்றும் வேலையே தவிர ஆக்கபூர்வமான அறிவிப்பு அல்ல.

முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கதி என்ன என்பதை மக்களுக்கு அறிவிக்காமல், இன்னொரு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என அறிவிப்பதை, முதல்–அமைச்சர் தன்னை முன்னிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற சுயநலனுக்காக, மக்கள் பணத்தை விரயம் செய்ய விரும்புகிறார் என்றுதான் எடுத்துக்கொள்ள முடியுமே தவிர, தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்காக மாநாடு நடத்துகிறார் என்று நிச்சயம் எடுத்துக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.  இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்