தலைமை செயலகத்தில் 3 நாட்கள் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களை சந்திக்க எடப்பாடி பழனிசாமி முடிவு

தலைமை செயலகத்தில் அ.தி.மு.க. (அம்மா) எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் சந்திக்க முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.;

Update: 2017-06-05 20:57 GMT

சென்னை,

முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. கட்சி உடைந்ததோடு, இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டது. அ.தி.மு.க. (அம்மா), அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) என இரண்டு அணியாக அந்த கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர்.

கட்சி உடைந்தபோது, 122 எம்.எல்.ஏ.க்களை கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைத்து, அவர்களுக்கு அரசியல் ரீதியாகவும், கட்சி பொறுப்பு ரீதியாகவும் சில வாக்குறுதிகள் தரப்பட்டன. ஆனால் அவர்களில் சிலருக்கு அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று தெரிகிறது. எனவே, அவர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். மேலும் தனியாக கூட்டம் போட்டு பேசி வருகின்றனர்.

தனி அணியாக

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களுமான தோப்பு வெங்கடாசலம், பழனியப்பன், செந்தில் பாலாஜி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் செய்யாறு தூசி கே.மோகன், அரூர் முருகன், ஆம்பூர் பாலசுப்பிரமணி உள்பட 8 எம்.எல்.ஏ.க்கள், கடந்த மாதம் 22–ந் தேதி தலைமைச் செயலகத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர்.

அவர்களை தொடர்ந்து அ.தி.மு.க. (அம்மா) அணி எம்.எல்.ஏ.க்கள், மேலும் 10 பேர் தலைமைச் செயலகத்தில் முதல்–அமைச்சரை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது அவர்கள் தரப்பு கோரிக்கைகளை முன்வைத்தனர். தனித்தனி அணியாக ஆளும் கட்சியை சேர்ந்த அ.தி.மு.க. (அம்மா) எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

3 நாட்கள் சந்திப்பு

இந்த நிலையில், அ.தி.மு.க. (அம்மா) அணியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் நேரில் அழைத்து பேச முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். 6–ந் தேதி (இன்று), 7–ந் தேதி (நாளை) மற்றும் 8–ந் தேதிகளில் தலைமைச் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

மேலும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க எம்.எல்.ஏ.க்கள் வரும்போது அவர்களின் மாவட்ட அமைச்சருடன்தான் வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக தெரிகிறது. சட்டசபை கூடும் நிலையில் தங்கள் தரப்பு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை உறுதி செய்வதற்காக இந்த சந்திப்பு நடத்தப்படுவதாக தெரியவருகிறது.

மேலும் செய்திகள்