முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்துக்கு வழங்கிய சிறை தண்டனை நிறுத்தி வைப்பு; ஐகோர்ட்டு உத்தரவு

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்துக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2017-06-05 20:54 GMT

சென்னை,

1991 முதல் 1996–ம் ஆண்டு வரை ஜெயலலிதா தலைமையில் நடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் சி.அரங்கநாயகம். அப்போது, இவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1 கோடியே 15 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், அரங்கநாயகத்தின் மனைவி கலைச்செல்வி, மகன்கள் சந்தானபாண்டியன், முருகன் அதியமான் ஆகியோரையும் போலீசார் குற்றவாளியாக சேர்த்திருந்தனர்.

இந்த வழக்கில், அரங்கநாயகத்துக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து சிறப்பு கோர்ட்டு நீதிபதி எம்.கோமதிநாயகம் கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பு அளித்தார். மேலும், கலைச்செல்வி உள்ளிட்ட 3 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், அவர்களை வழக்கில் இருந்து விடுவிப்பதாக நீதிபதி கூறியிருந்தார்.

நிறுத்தி வைப்பு

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அரங்கநாயகம் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு ஐகோர்ட்டு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்க லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். மேலும், விசாரணையை வருகிற 28–ந்தேதிக்கு தள்ளிவைப்பதாகவும், அதுவரை கீழ் கோர்ட்டு வழங்கிய தண்டனையை நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதி என்.சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்