முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் மீது கோர்ட்டு உத்தரவின்பேரில் 4 பிரிவுகளில் திருச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2017-05-28 21:18 GMT
திருச்சி,

திருச்சி கே.கே.நகரை சேர்ந்தவர் லோகநாதன்(வயது 56). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் 50 ஏக்கரில் நிலம் உள்ளது. இவரை கடந்த 2015-ம் ஆண்டு நெல்லை நாங்குநேரியை சேர்ந்த காமராஜ் என்பவர் அணுகி தன்னை அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் நத்தம்விசுவநாதனின் ஆதரவாளர் என அறிமுகப்படுத்திக்கொண்டார். பின்னர் அவர் லோகநாதனிடம், இலுப்பூர் பகுதியில் சூரியஒளி மின்தகடு மூலம் மின்சாரம் தயாரிக்க 200 ஏக்கர் நிலம் வாங்கி தரும்படி கூறினார்.

இதற்காக முன்பணமாக ரூ.20 லட்சத்தை லோகநாதனிடம் காமராஜ் கொடுத்தார். இதையடுத்து லோகநாதன் தன்னிடம் இருந்த 50 ஏக்கர் நிலம் மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ள நில உரிமையாளர்களிடம் பேசி அவர்களுடைய நிலத்துக்கான ஆவணங்களையும் சேர்த்து காமராஜிடம் கொடுத்தார். அதன்பிறகு காமராஜ் லோகநாதனை தொடர்பு கொள்ளவில்லை. மீதமுள்ள பணத்தையும் தராமல் இழுத்தடித்து வந்தார். இதனால் லோகநாதன் வக்கீல் மூலம் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், காமராஜ் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்பினார். இதனால் ஆத்திரம் அடைந்த காமராஜ் தனது நண்பரான சென்னையை சேர்ந்த அருண் விஜயகுமார் மற்றும் அடியாட்களுடன் லோகநாதன் வீட்டை அடித்து நொறுக்கினார்.

முன்னாள் அமைச்சர் மீது வழக்கு

இது குறித்து கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் லோகநாதன் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து நத்தம் விசுவநாதன், காமராஜ், அருண்விஜயகுமார் உள்ளிட்ட சிலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 2-ல் லோகநாதன் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரகண்ணன், நத்தம் விசுவநாதன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய கே.கே.நகர் போலீசாருக்கு உத்தரவிட்டதோடு இது குறித்த அறிக்கையை ஒரு மாதத்தில் கோர்ட்டில் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை தொடர்ந்து கே.கே.நகர் போலீசார் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், காமராஜ், அருண்விஜயகுமார் மற்றும் 2 பேர் மீது 120-பி (கூட்டு சேர்ந்து சதிதிட்டம் தீட்டுதல்), 294-பி (ஆபாசமாக திட்டுதல்), 448 (அத்துமீறி நுழைதல்), 506 பகுதி-2 (கொலை மிரட்டல் விடுத்தல்) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து இவர்கள் 5 பேரிடமும் போலீசார் விரைவில் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்