தமிழக மின்சார வாரியத்துக்கு மத்திய ஊரக மின்மயமாக்கல் கழகம் ரூ.85 ஆயிரம் கோடி நிதி உதவி அமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம்
தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு, மத்திய ஊரக மின்மயமாக்கல் கழகம் ரூ.85 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்குகிறது.
சென்னை,
தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு, மத்திய ஊரக மின்மயமாக்கல் கழகம் ரூ.85 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்குகிறது. இதற்கான ஒப்பந்தம் மின்துறை அமைச்சர் பி.தங்கமணி முன்னிலையில் கையெழுத்து ஆனது.
ரூ.85 ஆயிரம் கோடி நிதி உதவி
தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி, மத்திய அரசின் ஊரக மின் மயமாக்கல் கழக தலைவர்–மேலாண்மை இயக்குனர் பி.வி.ரமேஷ் மற்றும் உயர் அதிகாரிகள் முன்னிலையில் நிதி உதவி வழங்குவதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது.
இதில், தமிழக அரசின் எரிசக்தி துறை முதன்மைச் செயலாளர் விக்ரம் கபூர், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் எம். சாய்குமார், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம், ஊரக மின் மயமாக்கல் கழக இயக்குனர்கள் மற்றும் உயர்அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அப்போது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் ஆகியவற்றால் 5 முதல் 8 ஆண்டுகள் வரை செயல்படுத்தப்பட உள்ள மின் உற்பத்தி, தொடரமைப்பு மற்றும் பகிர்மான திட்டங்களுக்காக மொத்தம் ரூ.85 ஆயிரத்து 723 கோடி நிதி உதவிக்கான இரு ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு, ஆவணங்கள் கையெழுத்திடப்பட்டது.
இதையடுத்து, முதல் தவணையாக ரூ.10 ஆயிரத்து 453 கோடி நிதி உதவிக்கான அனுமதி கடிதத்தை ஊரக மின் மயமாக்கல் கழகத் தலைவர்–மேலாண்மை இயக்குநர் பி.வி.ரமேஷ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பி.தங்கமணி பேசும்போது கூறியதாவது:–
இழப்பு குறைந்தது
தமிழக மின்வாரியம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கை காரணமாக அதன் நிதிநிலைமை கணிசமான அளவில் முன்னேற்றம் கண்டு, 2013–2014–ம் நிதியாண்டில் ரூ.13,985 கோடி அளவில் இருந்த வருவாய் இழப்பு 2016–17–ம் நிதியாண்டில் ரூ.3,783 கோடியாக குறைக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசு உதய் திட்டத்தில் சேர்ந்து அத்திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு இருக்கிறது. தமிழக அரசானது உதய் திட்டத்தின் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்ட கடன் தொகையான ரூ.30,420 கோடியில் 75 சதவீதமான ரூ.22,815 கோடியை ஏற்றுக்கொண்டது.
சேமிப்பு
மீதமுள்ள 25 சதவீத கடனான ரூ.7,605 கோடியை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகம், கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டி திருப்பி செலுத்த ஏதுவாக, தமிழக அரசு காப்புறுதி வழங்கியுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகத்திற்கு ஆண்டுக்கு ரூ.3,082 கோடி வட்டி சேமிப்பு ஏற்படும்.
அரசு ஏற்றுக்கொண்ட கடனை திருப்பி செலுத்துவதை தவிர்ப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.2,282 கோடி பணப்புழக்கத்தில் சேமிப்பும் ஏற்படும்.
முதன்மை மாநிலம்
தமிழகத்தில் அதிகரித்து வரும் மின்தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு, 5 முதல் 8 ஆண்டுகளில் 13 ஆயிரம் மெகாவாட் அளவிற்கான சொந்த மின் உற்பத்தி திறனை மேம்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதுதவிர, மரபு சார்ந்த எரிசக்தி ஆதாரங்களுக்கு பதிலாக இயற்கை வளங்களைப் பயன்படுத்தும் விதமாக 500 மெகாவாட் சூரிய மின்சக்தி நிலையத்தை கடலாடியில் தமிழக அரசு அமைக்க திட்டமிட்டு இருக்கிறது.
தற்போது கையெழுத்தான ஒப்பந்தம் மற்றும் முன்னதாக பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தையும் சேர்த்தால் அடுத்த 6 ஆண்டுகளில் தமிழக மின் திட்டங்களின் மொத்த முதலீடு ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும். இதன்மூலம் 2023–ம் ஆண்டு தமிழகம் மின்துறையில் முதன்மையான மாநிலமாக மாறும்.
இவ்வாறு அவர் கூறினார்.