தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு மத்திய அரசு டிஜிட்டல் உரிமம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Update: 2017-04-18 23:00 GMT
சென்னை, 

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு மத்திய அரசு டிஜிட்டல் உரிமம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

கேபிள் டி.வி. சேவை 

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் விடாமுயற்சியின் காரணமாகவும், தமிழ்நாடு அரசு எடுத்த பல்வேறு தொடர் நடவடிக்கைகளின் காரணமாகவும், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு மத்திய அரசு டிஜிட்டல் (டி.ஏ.எஸ்.) உரிமம் வழங்கியுள்ளது. இதற்கான ஆணையை மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் 17.4.17 அன்று வெளியிட்டது.

அரசு கேபிள் டி.வி. நிறுவனம் 4.10.07 அன்று தொடங்கப்பட்டது. குறைந்த கட்டணத்தில் நிறைவான கேபிள் டி.வி. சேவையை பொதுமக்களுக்கு வழங்குவதே அதன் நோக்கம் ஆகும்.

புத்துயிரூட்டினார் 

இதற்காக தஞ்சாவூர், திருநெல்வேலி, கோயம்புத்தூர் மற்றும் வேலூர் ஆகிய நான்கு இடங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டன. பல்வேறு காரணங்களினால் இந்நிறுவனம் செயலிழந்த நிலையில் இருந்தது.

ஜெயலலிதா கடந்த மே 2011–ம் ஆண்டில் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர், அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை புனரமைத்து, புத்துயிரூட்டி ‘‘தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம்’’ என்று பெயர்மாற்றம் செய்தார். தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சேவையை சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் 2.9.11 அன்றும், சென்னை மாநகர ஒளிபரப்பு சேவையை 20.10.12 அன்றும் அவர் தொடக்கிவைத்தார்.

மாபெரும் வரவேற்பு 

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தற்பொழுது குறைந்த கட்டணத்தில் 90 முதல் 100 சேனல்களை உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் கேபிள் டி.வி. சேவை, கேபிள் ஆபரேட்டர்களிடமும், பொதுமக்களிடமும் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 2.9.11 அன்று 4.94 லட்சங்கள் என இருந்த இந்நிறுவனத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை, அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக 70.52 லட்சமாக உயர்ந்துள்ளது.

அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், சென்னை மாநகர பகுதிகளுக்கு மட்டும் சி.ஏ.எஸ். (கண்டி‌ஷனல் ஆக்சஸ் சிஸ்டம்) முறையிலான பன்முக கேபிள் ஆபரேட்டர் (மல்டி சிஸ்டம் ஆபரேட்டர்) உரிமத்தை வழங்கியது.

விண்ணப்பிக்கப்பட்டது 

கேபிள் டி.வி. நெட்வொர்க் திருத்தச் சட்டம் 2011–ன்படி முதல் கட்டமாக சென்னை உள்ளிட்ட இந்தியாவிலுள்ள நான்கு பெருநகரங்களை 31.10.12 அன்றைய தேதிக்குள் டிஜிட்டல் மயமாக்கிட வேண்டும் என்றும், நாடு முழுவதும் 31.12.16 அன்றைய தேதிக்குள் டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் டிஜிட்டல் மயமாக்கலுக்கு தேவையான, சென்னை பகுதிகளுக்கான டி.ஏ.எஸ். (டிஜிட்டல் அட்ரசபிள் சிஸ்டம்) உரிமம் வழங்கக்கோரி 5.7.12 அன்றும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கு டி.ஏ.எஸ். உரிமம் வழங்கக்கோரி 23.11.12 அன்றும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் விண்ணப்பித்திருந்தது.

இது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அமைப்பின் கவனத்திற்கு கொண்டு சென்றது.

பிரதமருக்கு கடிதம் 

டிராயின் பரிந்துரை குறித்து முடிவெடுப்பதற்காக, அமைச்சகங்களின் கூட்டுக்குழுவை 3.1.13 அன்று மத்திய அரசு அமைத்தது. ஜெயலலிதா கடந்த 16.12.2012 அன்று அப்போதைய பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு டி.ஏ.எஸ். பகுதிகளுக்கான டி.ஏ.எஸ். உரிமம் வழங்கிட தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கு அறிவுறுத்துமாறு கோரியிருந்தார்.

பின்னர் அவர் 3.6.14 அன்று பிரதமரை நேரில் சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு டி.ஏ.எஸ். உரிமம் வழங்க வலியுறுத்தினார். மேலும், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையின் இணை மந்திரிக்கும் (தனிப்பொறுப்பு) ஜெயலலிதா கடிதம் அனுப்பினார். இதனைத் தொடர்ந்து 5.7.14 அன்றும் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

எம்.பி.க்கள் வலியுறுத்தல் 

மேலும், அ.தி.மு.க. எம்.பி.க்கள், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவர், தகவல் தொழில்நுட்பவியல் துறையின் செயலாளர் மற்றும் உயர் அலுவலர்கள், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரியை 8.12.14 அன்று டெல்லியில் நேரில் சந்தித்து டி.ஏ.எஸ். உரிமம் வழங்குவதை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தினர்.

7.8.15 அன்று பிரதமரை ஜெயலலிதா நேரில் சந்தித்து, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு டி.ஏ.எஸ். உரிமம் வழங்குவது குறித்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்.

தற்காலிக உரிமம் 

இதற்கிடையே, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சென்னை டி.ஏ.எஸ். பகுதிகளுக்கும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கும் எம்.எஸ்.ஓ. உரிமம் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் நிலுவையில் இருந்த நிலையில், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு தற்காலிக உரிமம் உடனடியாக வழங்கும்படி 29.10.15 அன்று விண்ணப்பிக்கப்பட்டது.

14.6.16 அன்று பிரதமரிடம் ஜெயலலிதா அளித்துள்ள கோரிக்கை மனுவில், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு டி.ஏ.எஸ். பகுதிகளுக்கான எம்.எஸ்.ஓ. உரிமம் வழங்குவது குறித்து மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.

உரிமம் கிடைத்துவிட்டது 

மேலும், 27.2.17 அன்று பிரதமரையும், 28.2.17 அன்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடுவையும் நேரில் சந்தித்து டி.ஏ.எஸ். உரிமம் வழங்குவது குறித்து வலியுறுத்தப்பட்டது. இப்படிப்பட்ட இடைவிடாத தொடர் முயற்சிகளின் காரணமாக, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு டி.ஏ.எஸ். உரிமம் வழங்கி ஆணையிட்டுள்ளது.

இந்தியாவிலேயே மாநில அரசின் நிறுவனத்திற்கு டி.ஏ.எஸ். உரிமம் வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். வெகு விரைவில் தமிழக மக்கள் குறைந்த விலையில் உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் கேபிள் டி.வி. சேவையை இதன்மூலம் பெறுவர்.

பிரதமருக்கு நன்றி 

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் வழங்கியதற்கு முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, பிரதமர், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரிக்கும் தமிழக அரசு சார்பாகவும், தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கேபிள் டி.வி. உரிமையாளர்கள் சங்கம் 

தமிழ்நாடு கேபிள் டி.வி. உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் காயல் ஆர்.எஸ்.இளவரசு, பொதுச்செயலாளர் தஞ்சை ஜே.ஜீவா ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

இந்தியா முழுவதும் மிக துல்லியமாக மக்கள் நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டும் என்பதற்காக டிஜிட்டல் முறையை மத்திய அரசு கொண்டுவந்தது. தமிழக அரசுக்கு டிஜிட்டல் உரிமம் பெறுவதற்காக மறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசுக்கு டிஜிட்டல் உரிமம் கிடைத்து இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. இதற்கான அனுமதியை அளித்திருக்கும் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறைக்கும், அதற்காக முயன்று வெற்றி பெற்றிருக்கும் முதல்–அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்