சேலம் அருகே ரெயில்வே சிக்னலின் கேபிளை துண்டித்து டெல்லி ரெயிலில் கொள்ளை
தருமபுரியில் ரெயில்வே சிக்னலின் கேபிளை துண்டித்து திருவனந்தபுரம் - டெல்லி ரெயிலில் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.
தருமபுரி,
திருவனந்தபுரத்தில் இருந்து கோவை, ஈரோடு, சேலம், மொரப்பூர், காட்பாடி வழியாக டெல்லிக்கு தினமும் கேரள எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நேற்று மாலை திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டது. நள்ளிரவு 12.05 மணிக்கு தர்மபுரி மாவட்டம் மொரப்பூரை அடுத்த தொட்டம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது சிக்னல் கிடைக்காததால் ரெயில் நடு வழியில் நிறுத்தப்பட்டது. நள்ளிரவு நேரம் என்பதால் பயணிகள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது எஸ் - 3 உள்பட 5 பெட்டிகளில் கொள்ளையர்கள் 5 பேர் திடீரென ஏறினர். தூங்கி கொண்டிருந்த பெண்களிடம் செயினை பறித்தனர்.
இதனால் கண்விழித்த பயணிகள் கூச்சலிட்டதால் அருகில் இருந்தவர்கள் கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். உடனே கொள்ளையர்கள் ரெயிலில் இருந்து இறங்கி இருட்டு பகுதிக்குள் தப்பி ஓடினர். இது குறித்து தொட்டம்பட்டி ரெயில் நிலைய அதிகாரிகளுக்கும், சேலம் ஜங்சன் ரெயில்வே போலீசாருக்கும் ரெயில் டிரைவர் தகவல் தெரிவித்தார். ரெயில்வே போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது சிக்னலுக்கு செல்லும் வயர் துண்டிக்கப்பட்டு கிடந்தது. சிக்னல் வயரை துண்டித்து கொள்ளையர்கள் ரெயிலில் ஏறி 3 பெண்களிடம் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.
நகைகளை பறிகொடுத்த பெண்கள் அவசரமாக டெல்லிக்கு செல்ல வேண்டியிருந்தால் மொரப்பூர் ரெயில் நிலையத்தில் இறங்கி புகார் கொடுக்க மறுத்தனர். இதையடுத்து 45 நிமிடம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது. அந்த ரெயிலிலே ரெயில்வே போலீசார் நகையை பறி கொடுத்த பெண்களிடம் புகாரை பெற்றனர். ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.