நெல்லை பூலாங்குளம் பகுதியில் மதுகடையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்

திருநெல்வேலி மாவட்டம் பூலாங்குளம் பகுதியில் மதுகடையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

Update: 2017-04-02 09:51 GMT
ஆலங்குளம், 


நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் இருபுறமும் 500 மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ள மதுக்கடைகளை மார்ச் 31–ந் தேதிக்குள் (நேற்று) மூடுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

அத்துடன், நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்கு அப்பால் மதுக்கடைகள் உள்ளன என்ற விளம்பரம் எதையும் வைக்கக்கூடாது என்றும், இந்த உத்தரவு முறையாக பின்பற்றப்படுகிறதா? என 15 நாட்களுக்கு ஒருமுறை மாவட்ட கலெக்டர் மாநில அரசுக்கு அறிக்கை வழங்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.

சமூக நலப்பேரவை சார்பில் வக்கீல் கே.பாலு மற்றும் பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்து கடந்த டிசம்பர் 15–ந் தேதி இந்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்தது. இதனையடுத்து இதற்கு விலக்கு கோரி தமிழகம், கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தன. ஆனால் வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை உறுதி செய்தது. தமிழ்நாட்டை பொறுத்தவரை அரசே மதுக்கடைகளை நடத்தி வருவதால் சுப்ரீம் கோர்ட்டு கூறிய சில விதிவிலக்குகள் தமிழகத்திற்கு கிடையாது.

தமிழ்நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் மதுக்கடைகள் நடத்த நேற்று முதல் தடை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவின் மூலம் தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகள் முழுமையாக மூடப்படவேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 5,672 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இவற்றில் சுமார் 3,400 கடைகள் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை பகுதிகளில் 500 மீட்டர் தொலைவுக்குள் அமைந்து உள்ளன.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து இந்த 3,400 டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை உடனே மூடுமாறு நேற்றிரவு டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அந்த கடைகள் மூடப்பட்டன. அந்த கடைகள் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்கு அப்பால் மாற்றப்படுகின்றன. மாநிலம் முழுவதும் நெடுஞ்சாலைகளின் இருபுறமும் 500 மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ள மதுக்கடைகள் அடைக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அருகே உள்ள பிற கடைகளுக்கு படை எடுத்து உள்ளனர். இதனால் அங்கு கூட்டம் அதிகமாகி உள்ளது, பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்து இருந்த கடைகள் அடைக்கப்பட்டன. இதனையடுத்து அருகே இருந்த ஊர்களில் உள்ள கடைகளுக்கு மது பிரியர்கள் படை எடுத்து உள்ளனர். ஆலங்குளம் தாலுகா பூலாங்குளம் கிராமத்தில் உள்ள மதுகடையில் கூட்டம் அதிகரித்தது. இதனையடுத்து பொதுமக்கள் மதுகடையை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். 

மேலும் செய்திகள்