சைதாப்பேட்டையில் இந்தியன் வங்கி ஏ.டி.எம். தீப்பிடித்து கருகியது பணம் எரிந்ததா?

சைதாப்பேட்டையில் இந்தியன் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். தீ பிடித்து கருகியது. இந்த தீ விபத்தில் பணம் எரிந்ததா? என்பது குறித்து தீயணைப்பு துறை அதிகாரி விளக்கம் அளித்தார்.

Update: 2017-03-13 22:02 GMT

சென்னை,

சென்னை சைதாப்பேட்டை கலைஞர் வளைவு அருகே இந்தியன் வங்கிக்கு சொந்தமான ஒரு ஏ.டி.எம். உள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த ஏ.டி.எம்.மில் நேற்று மாலை வழக்கத்தை விட அதிகமாகவே மக்கள் கூட்டம் அலைமோதியது.

இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் பொதுமக்கள் பணம் எடுத்து கொண்டு இருந்தபோது அங்கிருந்த ஏ.டி.எம். எந்திரத்தின் பின்பக்கத்தில் இருந்து திடீரென கரும் புகை வந்தது. பணம் எடுக்க வந்தவர்கள் இதை பார்த்ததும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரத்தில் ஏ.டி.எம். மளமளவென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது.

பணம் எரிந்ததா?

தகவலின் பேரில் சைதாப்பேட்டை, கிண்டி, தேனாம்பேட்டை ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 25 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர்.

தீ விபத்து குறித்து சைதாப்பேட்டை தீயணைப்பு துறை அதிகாரி சூரியபிரகாஷ் கூறுகையில், ‘‘இந்த தீ விபத்து மின்கசிவால் ஏற்பட்டுள்ளது. இதில் ஏ.டி.எம். திரை, யூ.பி.எஸ் மற்றும் மின் இணைப்பு கருவிகள் முழுவதுமாக எரிந்து நாசமாயின. ஆனால் ஏ.டி.எம்.மில் வைத்திருந்த பணம் எரிந்ததாக தெரியவில்லை. வங்கி அதிகாரிகளின் முழுமையான விசாரணைக்கு பிறகே பணம் எரிந்தா? இல்லையா? என்பது குறித்து முழுமையாக தெரியவரும்’’ என்றார்.

இந்த தீ விபத்து குறித்து சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்