திட்டங்களை விரைந்து செயல்படுத்த ரெயில்வே துறையுடன் தமிழக அரசு இணைந்து செயல்பட வேண்டும்

திட்டங்களை விரைந்து செயல்படுத்த ரெயில்வே துறையுடன் தமிழக அரசு இணைந்து செயல்பட வேண்டும் என மத்திய மந்திரி சுரேஷ் பிரபு கூறி உள்ளார்.

Update: 2017-03-04 19:45 GMT

சென்னை,

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில், தெற்கு ரெயில்வேயின் 10 புதிய திட்டங்களை மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு நேற்று தொடங்கி வைத்தார்.

அதன்படி மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் இருந்து பேசின் பிரிட்ஜ் சந்திப்பு ரெயில் நிலையங்களுக்கு இடையே ஆன 5–வது மற்றும் 6–வது புதிய ரெயில் பாதை, நெமிலிச்சேரி ரெயில் நிலையத்தில் பயணிகள் சுரங்கப்பாதை, சென்னை எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையங்களில் வை–பை இணையதள வசதி, தாம்பரம் ரெயில் நிலையத்தின் இரண்டாவது நுழைவாசலில் புதிய சுற்றோட்ட பகுதி மற்றும் பயணிகள் வசதிகள், மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருவழி நடைமேடை, கோடம்பாக்கம் ரெயில் நிலையத்தில் புதிய மேல் தள பயணச்சீட்டு அலுவலகம், திருநின்றவூர் ரெயில் நிலையத்தில் புதிய நடை மேம்பாலம் மற்றும் மேல் தள பயணச்சீட்டு அலுவலகம், சென்னை எழும்பூர்–மானாமதுரைக்கு வாரமிருமுறை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (16181/16182), அருப்புக்கோட்டை வழியாக செங்கோட்டை வரை நீட்டிப்பு ஆகிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.

மேலும், மதுரை சந்திப்பு ரெயில் நிலையத்தில் வை–பை இணையதள வசதி, செங்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து புதிய ஆரியங்காவு ரெயில் நிலையம் இடையே புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட அகல ரெயில்பாதையையும் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

விழாவில் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர், எம்.பி.க்கள் நவநீத கிருஷ்ணன், டாக்டர் மைத்ரேயன், டி.கே.ரெங்கராஜன், டாக்டர் ஜெ.ஜெயவர்தன், எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.ரவிச்சந்திரன், எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் வஷிஷ்ட ஜோரி வரவேற்புரையாற்றினார். சென்னை கோட்ட மேலாளர் அனுபம் சர்மா நன்றியுரையாற்றினார்.

சராசரியாக ரூ.800 கோடி

விழாவில் மத்திய மந்திரி சுரேஷ் பிரபு பேசியதாவது:–

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் இந்தியாவின் வடக்கில் இருந்து பார்க்கும் போது கடைசி மாநிலம்.  ஆனால், இங்கு இருந்து பார்க்கும் போது முதல் மாநிலம் ஆகும். ரெயில்வேத்துறை இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பிற்கு முதுகு எலும்பாக திகழ்கிறது.

தமிழகம் மற்றும் கேரளாவில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 1990–களில் தொலைதொடர்பு துறையில் அதிக முதலீடுகள் செய்யப்பட்டன. அப்போது தொலைதொடர்பு துறை மிகுந்த வளர்ச்சி அடைந்தது. அதைத்தொடர்ந்து எரிசக்தி துறைகளில் அதிக முதலீடு செய்யப்பட்டன. தற்போது போக்குவரத்து துறையில் முதலீடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி, கடந்த 3 வருடங்களில் ரூ. 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி முதலீடுகள் வந்துள்ளன. இதனை கொண்டு இரட்டை வழி மற்றும் 3 வழி ரெயில் பாதைகள் அமைத்தல், ரெயில் நிலையங்களை மேம்படுத்துதல் போன்றவற்றை மேற்கொண்டு வருகிறோம். கடந்த 5 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்துக்கு சராசரியாக 800 கோடி ரூபாய் தான் ஒதுக்கப்பட்டிருந்தது.

160 சதவீதம் அதிகம்

ஆனால், நாங்கள் 2015–16–ம் ஆண்டில் மட்டும் 1,560 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து இருக்கிறோம். 2017–18–ம் ஆண்டுக்கு 2 ஆயிரத்து 287 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து இருக்கிறோம். இது 160 சதவீதம் அதிகம் ஆகும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரெயில்வே பாதுகாப்புக்காக ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது.

இவற்றை கொண்டு தண்டவாளங்களை புதுப்பிப்பது, ரெயில் நிலையங்களை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள உள்ளோம். இந்தியாவில் சுமார் 40 ஆயிரம் ரெயில் பெட்டிகள் உள்ளன. இவற்றை நவீனப்படுத்தி வருகிறோம். மேலும் புதிய எல்.எச்.டி. ரக (இலகு ரக) பெட்டிகளையும் தயாரித்து வருகிறோம். ஜெர்மனி, கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளின் சிறப்பான தொழில்நுட்பங்களை கொண்டு புதிய ரெயில் பெட்டிகளை தயாரிக்க உள்ளோம்.

கோவை–பெங்களூரு புதிய ரெயில்

கோவை–பெங்களூரு இடையே புதிய ரெயில் சேவை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய அரசு மட்டுமே திட்டங்களை நிறைவேற்றாமல், மாநில அரசுகளும் இணைந்து செயல்பட்டால் திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதுடன், அந்தந்த மாநிலங்களின் திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்த முடியும்.

அதன்படி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்கள் ரெயில்வே துறையுடன் இணைந்து திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. எனவே இங்கு வந்திருக்கும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உங்கள் அரசாங்கத்திடம் எடுத்து கூறி, ரெயில்வே துறையுடன் இணைந்து செயல்பட வலியுறுத்த வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.

மதுரை–நாகர்கோவில் இரட்டை வழிப்பாதை

முன்னதாக பேசிய டி.கே.ரெங்கராஜன் எம்.பி., தமிழகத்தில் உள்ள ரெயில்பெட்டி தொழிற்சாலையை புதிய தொழில்நுட்பங்களுடன் நவீனப்படுத்த வேண்டும் என்றும், மதுரை–நாகர்கோவில் இடையே இரட்டை வழிப்பாதையை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், தாம்பரம்–செங்கல்பட்டு இடையிலான 3–வது வழித்தடத்தையும் விரைந்து முடிப்பதன் மூலம் சென்னை–கன்னியாகுமரிக்கு வழித்தடத்தில் அதிக ரெயில்களை இயக்க முடியும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்