‘திருநாவுக்கரசர் யார் என்றே தெரியாது’ -ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்; ‘தெரியாததால் இனிமேல் திட்டமாட்டார்’ -திருநாவுக்கரசர்

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.;

Update: 2017-03-01 20:25 GMT
சென்னை,

அப்போது அவரிடம், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பற்றி நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது, “நீங்கள் யாரையோ பற்றி கேட்கிறீர்கள். அவர் யார் என்றே எனக்கு தெரியாது“ என்று பதில் அளித்தார்.

இதுகுறித்து பின்னர் சென்னை விமான நிலையத்தில் திருநாவுக்கரசரிடம் நிருபர்கள் கருத்து கேட்ட போது, அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியில் எந்தவிதமான உட்கட்சி பூசலும் கிடையாது. இளங்கோவனுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவருக்கு எந்த பதிலும் சொல்ல மாட்டேன். திருநாவுக்கரசர் யார் என தெரியாது என்று சொன்னது நல்லது தான். தெரியாதவரை இனி மேல் திட்டமாட்டார் அல்லவா? தெரிந்த நபரை தானே திட்ட முடியும். இனி வேறு நபரை பிடித்து திட்டுவார்.

சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் கட்சியின் தலைவர்கள். நான் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர். அவர்கள் சொன்னபடிதான் நடந்துகொண்டு இருக்கிறேன். அவர்கள் சொன்னபடி நடக்கிறேனா? இல்லையா? என்பதை கவனிக்க வேண்டியது மேலிட தலைவர்கள் தான். கண்டவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதனால் எந்த பாதிப்பும் இல்லை. எனது கடமையை செய்து வருகிறேன்.  இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எந்த விதமான அனுமதியும் தரமாட்டோம் என்று தமிழக முதல்-அமைச்சர் அதிகாரப்பூர்வமாக, எழுத்துபூர்வமாக அரசாணை வெளியிட வேண்டும் என்றும், இல்லையென்றால் மத்திய அரசை வெளியிட செய்ய வேண்டும் என்றும் அப்போதுதான் மக்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவார்கள் எனவும் பேட்டியின் போது திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்