ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமுக்கத்தில் 50 ஆயிரம் பேர் திரண்டதால் மதுரை நகரமே குலுங்கியது

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்திற்கு 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் தமுக்கத்தில் திரண்டதால் மதுரை நகரமே ஸ்தம்பித்துள்ளது.

Update: 2017-01-20 06:59 GMT
மதுரை

மதுரை தமுக்கம் சாலையில் பல்லாயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கடந்த 3 நாட்களாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டத்தில் பொதுமக்கள், பெண்கள், கைக்குழந்தைகள், பள்ளி மாணவ-மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பங்கேற்றுள்ளனர்.

இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவ-மாணவிகள் கூட்டம் அலைமோதின. அணி அணியாக திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமுக்கம் சாலையில் திரண்டுள்ள மாணவ -மாணவிகள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவை தடை செய்ய வலியுறுத்தி  கோஷங்கள் எழுப்பியபடி உள்ளனர். மேலும் தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளையும் மாணவர்கள் போராட்டக்களத்தில் விளையாடி உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.
மாணவர்களின் போராட்டத்தில் வியாபாரிகள் மற்றும் தனியார் மற்றும் அரசு ஊழியர்களும் பங்கேற்றுள்ளனர்.

தமிழர்களின் பாரம்பரிய உரிமையான ஜல்லிக்கட்டு போட்டி இந்தாண்டே நிச்சயம் நடந்தாக வேண்டும். மாணவர்கள் நினைத்தால்  எதையும் சாதிக்க முடியும் என்பதை இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நிரூபிப்போம். வாடிவாசல்களை திறந்து காளைகளை விடும் வரை வீட்டுவாசல் மிதிக்க மாட்டோம் என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்