‘ரெட் பஸ்’ இணையதளத்தில் முன்பதிவு செய்தவர்கள் அதே பஸ்களில் பயணிக்கலாம் ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகி விளக்கம்

‘ரெட் பஸ்’ இணையதளம் மற்றும் செயலிகள் வழியாக டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், அதே பஸ்களில் பயணிக்கலாம் என ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகி கூறி உள்ளார்.

Update: 2017-01-10 21:15 GMT
சென்னை, 

‘ரெட் பஸ்’ இணையதளம் மற்றும் செயலிகள் வழியாக டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், அதே பஸ்களில் பயணிக்கலாம் என ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகி கூறி உள்ளார்.

‘ரெட் பஸ்’ மூலம் முன்பதிவு 

தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களுக்கான டிக்கெட்டுகள் ‘ரெட் பஸ்’ என்ற நிறுவனத்தின் இணையதளம் மற்றும் செயலிகள்(ஆப்ஸ்) மூலம் முன்பதிவு செய்யப்படுகின்றன. பயண தேதிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே முன்பதிவு தொடங்குவது வழக்கம்.

தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் போன்ற விழாக்காலங்களில் பெரும்பாலான ஊழியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல இணையதளம் வழியாக ‘ரெட் பஸ்’ மூலம் டிக்கெட் முன்பதிவு செய்துவருகிறார்கள்.

டிக்கெட் செல்லாதா? 

அதேபோல ஏராளமானோர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12–ந் தேதியில் இருந்தே தங்கள் ஊர்களுக்கு செல்வதற்கு டிக்கெட்டுகள் முன்பதிவு செய்துள்ளனர். அதேபோல் 15–ந் தேதிகளில் இருந்து சென்னை திரும்புவதற்கும் முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், 12–ந் தேதி முதல் 17–ந் தேதி வரை ‘ரெட் பஸ்’ இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் செல்லாது என்றும், ‘ரெட் பஸ்’ மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் அதனை ரத்துசெய்து டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் நேற்று சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.

அதோடு ஆம்னி பஸ்சில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் அந்தந்த பஸ் நிறுவனங்களின் இணையதளம் வழியாகவோ, பஸ் நிறுவன அலுவலகங்களை நேரடியாக அணுகியோ டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளதாக அந்த தகவலில் கூறப்பட்டு இருந்தது. இதனால் ‘ரெட் பஸ்’ மூலம் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

முற்றிலும் தவறானது 

இதுகுறித்து தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க பொருளாளர் மாறன் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:–

12–ந் தேதி முதல் 17–ந் தேதி வரை ‘ரெட் பஸ்’ இணையதளம் மற்றும் செயலி மூலம் முன்பதிவு செய்த டிக்கெட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு முற்றிலும் தவறானது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் தினசரி பஸ்களை இயக்கும் பெரும்பாலான முக்கிய நிறுவனங்கள் ‘ரெட் பஸ்’ நிறுவனத்தில் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

இதுதவிர விழாக்காலங்களில் புற்றீசல்கள்போல் தோன்றும் சில பஸ் நிறுவனங்களும் ‘ரெட் பஸ்’ நிறுவனத்தில் பதிவு செய்து பஸ்களை இயக்குவது வழக்கம். ஆனால், இதுபோன்ற புற்றீசல் பஸ் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை பெறுவதில்லை. இதுபோன்ற புகார்கள் வந்த சுமார் 40 பஸ் நிறுவனங்களை ‘ரெட் பஸ்’ நிறுவனம் தனது உறுப்பினர் பதிவில் இருந்து நீக்கிவிட்டது.

உரிய தேதியில் பயணிக்கலாம் 

இதனால், பொங்கல் பண்டிகைக்கு அந்த பஸ் நிறுவனங்களால் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியவில்லை. இந்த காழ்ப்புணர்ச்சியில் இதுபோன்ற தவறான தகவலை பரப்பிவிட்டனர். எனினும், இதனால் எங்களுக்கோ, ‘ரெட் பஸ்’ நிறுவனத்துக்கோ எந்த பாதிப்பும் இல்லை.

நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம், நீங்கள் டிக்கெட்டுகளை ரத்துசெய்ய வேண்டாம் என்றும், உரிய தேதிகளில், உரிய நேரத்தில் நீங்கள் முன்பதிவு செய்த பஸ்களில் பயணிக்கலாம் என்றும் தகவல் தெரிவித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்