அரசு போக்குவரத்து கழகத்துக்கு 2 ஆயிரம் புதிய பஸ்கள்
அரசு போக்குவரத்து கழகத்துக்கு 2 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்பட உள்ளதாக சிதம்பரத்தில் பஸ் ஊழியர்களுக்கு ஏ.சி. வசதியுடன் ஓய்வறை திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
சிதம்பரம்
திறப்பு விழா
சிதம்பரம் மணலூரில் உள்ள விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக கிளை பணிமனையில் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு ஏ.சி. வசதியுடன் ஓய்வறை திறப்பு விழா, இறந்த ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை மற்றும் 14 பேருக்கு பதவி உயர்வு ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ்மோகன் வரவேற்றார். போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கான ஏ.சி. வசதியுடன் ஓய்வறையை திறந்து வைத்து பணிக்காலத்தில் இறந்த ஊழியர்களின் வாரிசு தாரர்கள் 49 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணை, 14 பேருக்கு காலமுறை பதவி உயர்வு ஆணை ஆகியவற்றை வழங்கினர்.
2 ஆயிரம் புதிய பஸ்கள்
விழாவில் அமைச்சர் சிவசங்கர் பேசும்போது, அரசு போக்குவரத்து கழகத்துக்கு புதிதாக 2 ஆயிரம் பஸ்கள் வாங்குவதற்காக நிதி ஒதுக்கி அதற்கான டெண்டர் விடப்பட்டு, இறுதி கட்டத்தில் உள்ளது. இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் புதிய பஸ்கள் வர உள்ளது. புதிதாக 685 டிரைவர், கண்டக்டர் பணிக்கு ஆன்லைன் மூலம் 11 ஆயிரத்து 200 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் தேர்வு பெற்று உடல் தகுதி மற்றும் மருத்துவ தேர்வு முடிந்த பிறகு பணி நியமன ஆணை வழங்கப்படவுள்ளது என்றார்.
முதல் மண்டலமாக
விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், அரசு போக்குவரத்து கழகத்தில் வருமானத்தை ஈட்டித்தருவதில் முதல் மண்டலமாக கடலூர் மண்டலம் திகழ்கிறது. தொழிலாளர்கள் விபத்து இன்றி பணியாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் பணிமனைகளில் ஏ.சி. வசதியுடன் ஓய்வறைகள் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சியில் தொழிலாளர்கள் கோரிக்கைகளை வைத்து போராட்டம் நடத்தி வந்த நிலை மாறி, தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழிலாளர்கள் கோரிக்கை வைக்காமலேயே அவர்களது விருப்பங்களை நிறைவேற்றி வருகிறார் என்றார்.
விழாவில் தொழிற்சங்க தலைவர் தங்க.ஆனந்தன், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். கிளை மேலாளர்கள் கிருஷணமூர்த்தி, மணிவேல், உதவிப்பொறியாளர் பரிமளம், துணைமேலாளர் ரகுராமன், உதவிமேலாளர் சிவராமன், கடலூர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஜேம்ஸ்.விஜயராகவன், நகரமன்ற உறுப்பினர்கள் அப்புசந்திரசேகர், மணிகண்டன், நகர துணை செயலாளர் பாலசுப்பிரமணியன், லால்புரம் ஊராட்சி மன்ற தலைவர் கோமதி சேகர், புவனகிரி ஒன்றிய செயலாளர் மனோகர் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் கடலூர் கோட்ட பொதுமேலாளர் ராஜா நன்றி கூறினார்.