எருது விடும் விழாவில் 200 மாடுகள் சீறிப்பாய்ந்தன.
வளையாம்பட்டு கிராமத்தில் நடந்த எருது விடும் விழாவில் 200 மாடுகள் சீறிப்பாய்ந்தன.;
வாணியம்பாடி
வளையாம்பட்டு கிராமத்தில் நடந்த எருது விடும் விழாவில் 200 மாடுகள் சீறிப்பாய்ந்தன
வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டு கிராமத்தில் எருது விடும் திருவிழா நடைபெற்றது. இதில், திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், ஆலங்காயம், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வேலூர், கிருஷ்ணகிரி, மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
விழாவிற்கு கோவில் தர்மகர்த்தாவும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான சி.என்.சிகாமணி தலைமை தாங்கினார். ஆலங்காயம் ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி, ஊர் நாட்டாண்மை ஆனந்தன், உதவி நாட்டாண்மை ராஜா, ஊர் செயலாளர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மதன்குமார் வரவேற்று பேசினார்.
எருதுவிடும் விழாவை எம்.எல்.ஏ.க்கள் தேவராஜ், நல்லதம்பி உள்ளிட்டோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக ஓட விடப்பட்டன.
குறிப்பிட்ட இலக்கை குறைந்த நேரத்தில் கடந்து சென்ற காளையின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. எருது விடும் விழாவை காண்பதற்காக திருப்பத்தூர் மாவட்டம் மட்டுமல்லாது பல்வேறு மாவட்ட பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் பகுதியில் திரண்டனர். இதனால் அப்பகுதியே திருவிழாவாக காட்சியளித்தது. அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
எருது விடும் விழாவில் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டது. விழா நடைபெறுவதை வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா மேற்பார்வையிட்டார்.