பிளஸ்-1 மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
பிளஸ்-1 மாணவி மாயம்
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை தேவன் நகர் பகுதியை சேர்ந்த 16 வயதான பிளஸ்-1 மாணவி கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு 12-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். வெகுநேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தங்கள் மகளை பல்வேறு இடங்களிலும் தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை பற்றி எந்தவித தகலும் கிடைக்கவில்லை.
பின்னர் இது குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர். அதன்பேரில் மாணவி காணாமல் போய்விட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
போலீசார் மீட்பு
பின்னர் இந்த வழக்கு தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் விசாரணை நடத்தியபோது, மாயமான பிளஸ்-1 மாணவி ஈரோட்டில் உள்ள ஒரு வீட்டில் இருப்பது தெரிய வந்தது. அதன்பேரில் போலீசார் ஈரோட்டிற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அந்த மாணவி இருந்த வீட்டிற்கு போலீசார் சென்று பார்த்தபோது அந்த மாணவி மட்டும் தனியாக இருந்தார். உடனே மாணவியை போலீசார் மீட்டு தஞ்சைக்கு அழைத்து வந்தனர்.
பாலியல் பலாத்காரம்
அதைத்தொடர்ந்து அந்த மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஆட்டோ டிரைவரான தஞ்சை மானோஜிப்பட்டி கன்னியம்மாள் நகரை சேர்ந்த பழனிசாமி மகன் பாண்டியன்(வயது 25) என்பவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
20 ஆண்டுகள் சிறை
இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியனை கைது செய்து தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி சுந்தர்ராஜன் விசாரணை செய்து, மாணவியை பலாத்காரம் செய்த பாண்டியனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
மேலும் அவர், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தார். அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.