செல்போன் செயலியின் மூலம் பணம் செலுத்துவதாக கூறி சைக்கிள் கடைக்காரரிடம் ரூ.20 ஆயிரம் மோசடி
செல்போன் செயலியின் மூலம் பணம் செலுத்துவதாக கூறி சைக்கிள் கடைக்காரரிடம் ரூ.20 ஆயிரம் மோசடி செய்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆட்டையாம்பட்டி அருகே வேலநத்தம் அர்த்தனாரி தெருவை சேர்ந்தவர் கோகுல்ராஜ் (வயது 25). இவர் சைக்கிள் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அவரது செல்போனில் தொடர்பு கொண்ட ஒருவர், 2 சைக்கிள் வேண்டும் என்று செல்போன் மூலம் ஆர்டர் செய்துள்ளார். உடனே 2 சைக்கிளுக்கு ரூ.19,998-ஐ செலுத்துமாறு அவர் கூறியுள்ளார். இதையடுத்து பணம் அனுப்பும் செல்போன் செயலி மூலம் பணத்தை செலுத்தி விடுவதாக அந்த நபர் தகவல் அனுப்பி வைத்துள்ளார். பின்னர் அந்த தொகையை செலுத்துவதாக கூறி அந்த செயலி மூலம் பணம் அனுப்புவதற்கு பதிலாக பணம் கேட்டு வேண்டுகோள் (ரெக்வஸ்ட்) அனுப்பி வைத்துள்ளார். அதை கவனிக்காத கோகுல்ராஜ், அதை பதிவு செய்துவிட்டார். இதனால் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.19,998 தொகையானது அந்த நபரின் கணக்கிற்கு சென்றுவிட்டது. இந்த மோசடி குறித்து அறிந்த கோகுல்ராஜ் நேற்று மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பண மோசடி செய்த நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது புதுமாதிரியான மோசடியாக இருக்கிறது என்றும், எனவே, பணம் செலுத்தும் வசதி கொண்ட செல்போன் செயலிகள் மூலம் பணம் அனுப்புவதாக கூறினால் அதை கவனத்துடன் கையாள வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.