சொந்த செலவில் 20 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திய பொதுமக்கள்
தொரப்பாடி கணபதிநகரில் 20 கண்காணிப்பு கேமராக்களை பொதுமக்கள் பொருத்தினர்.;
வேலூர் தொரப்பாடி கணபதிநகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு திருட்டு, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும்படி மாநகராட்சி நிர்வாகம், காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து கணபதிநகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக 9 தெருக்களில் ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் 20 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்த நிலையில் நேற்று கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் நிகழ்ச்சி நடந்தது. குடியிருப்போர் நலச்சங்க தலைவர் எத்திராஜி தலைமை தாங்கினார். கவுன்சிலர் லோகநாதன், சங்க செயலாளர் கண்ணபிரான், துணைசெயலாளர் சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாநகராட்சி துணை கமிஷனர் சசிகலா கலந்து கொண்டு கண்காணிப்பு கேமராக்களை இயக்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் கணபதிநகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.