சாலையில் வேன் கவிழ்ந்து பெண் பக்தர்கள் உள்பட 20 பேர் காயம்

சாலையில் வேன் கவிழ்ந்து பெண் பக்தர்கள் உள்பட 20 பேர் காயமடைந்தனர்.;

Update:2023-10-25 00:41 IST

வேளச்சேரியை சேர்ந்தவர்கள்

சென்னை வேளச்சேரியை சேர்ந்த 26 பெண் பக்தர்கள் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் மதியம் ஒரு சுற்றுலா வேனில் புறப்பட்டனர். நேற்று முன்தினம் மாலை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, விஜயகோபாலபுரம் பஸ் நிறுத்தம் அருகே அந்த வேன் சென்று கொண்டிருந்தது.

அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய வேன் எதிரே உள்ள சாலைக்கு சென்று கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த பெண் பக்தர்கள் இடிபாடுகளுக்கிடையே சிக்கினர். மேலும் அந்தப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

19 பெண் பக்தர்கள் காயம்

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார், பாடாலூர் போலீசார், நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருந்த பெண் பக்தர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இந்த விபத்தில் வேன் டிரைவர் மற்றும் 19 பெண் பக்தர்கள் காயமடைந்தனர்.

இவர்களில் பலர் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும், மீதமுள்ளவர்கள் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து போலீசார் கிரேன் உதவியுடன், அந்த வேனை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். இந்த விபத்து தொடர்பாக பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்