விளையாட்டு மைய உரிமையாளரிடம் ரூ.20 லட்சம் மோசடி
கோவையில் விளையாட்டு மைய உரிமையாளரிடம் அதிக பணம் தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை
கோவையில் விளையாட்டு மைய உரிமையாளரிடம் அதிக பணம் தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த மோசடி குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
விளையாட்டு மைய உரிமையாளர்
கோவை சிட்கோ அபிராமி நகர் பகுதியை சேர்ந்தவர் சலீம் (வயது 49). இவர் குழந்தைகளுக்கான விளையாட்டு மையம் நடத்தி வருகிறார். இவருடைய செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் ஆன்லைன் மூலமாக பகுதி நேர வேலை இருக்கிறது. அதில் சேர்ந்தால் தினமும் அதிகமாக சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது.
உடனே சலீம், அந்த குறுஞ்செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருந்த செல்போனுக்கு தொடர்பு கொண்டார். மறுமுனையில் பேசிய நபர், நீங்கள் டெலிகிராம் குரூப்பில் சேர வேண்டும். அதில் நாங்கள் தினமும் ஒரு டாஸ்க் கொடுப்போம். அதற்கு நீங்கள் பதில் கொடுப்பதுடன் குறைந்த தொகையை செலுத்தினால் நாங்கள் நீங்கள் கொடுக்கும் டாஸ்க்கும் சேர்த்து தொகையை அனுப்புவோம் என்று கூறினார்கள்.
டெலிகிராம் குரூப்
இதையடுத்து சலீம் அந்த டெலிகிராம் குரூப்பில் சேர்ந்தார். அவருக்கு தினமும் ஒரு டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் முதலில் ரூ.1000 அனுப்பி வைத்தார். அதற்கு உடனடியாக ரூ.1,250 கிடைத்தது. பின்னர் ரூ.2 ஆயிரம் அனுப்பியபோது ரூ.2,500 கிடைத்தது. இப்படி குறைந்த தொகையை அனுப்பியபோது அதற்கு உடனடியாக பணத்தை கொடுத்தனர்.
பின்னர் ரூ.1 லட்சத்துக்கும் மேல் பணத்தை அனுப்பியபோது அதற்கான தொகையை கொடுக்கவில்லை. இது குறித்து கேட்டதற்கு ரூ.1 லட்சத்துக்கு அதிகமாக தொகையை கொடுக்கும்போது அந்த பணத்தை உடனடியாக எடுக்க முடியாது என்று கூறினார்கள். இதை நம்பிய சலீம் தொடர்ந்து பணத்தை அனுப்பிக்கொண்டே இருந்தார்.
ரூ.20 லட்சம் மோசடி
இப்படி அவர் பல்வேறு தவணைகளாக ரூ.20 லட்சம் அனுப்பி உள்ளார். ஆனால் அந்த பணத்தை அவர்கள் திரும்ப கொடுக்கவில்லை. பலமுறை கேட்டதற்கு எவ்வித பதிலும் இல்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சலீம் இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து போலீசார் கூறும்போது, ஆன்லைனில் டாஸ்க் மூலம் பணம் அனுப்பி வைத்தால் கூடுதல் பணம் தருவதாக யாராவது கூறினால் அதை நம்ப வேண்டாம். இது சிறிய மீனை போட்டு பெரிய மீனை பிடிப்பதுபோன்று ஆகும். எனவே இதுபோன்று யாராவது கூறி குறுஞ்செய்தி அனுப்பினால் உஷாராக இருக்க வேண்டும் என்றனர்.