5 ஓட்டல்களில் 20 கிலோ சிக்கன் பறிமுதல்
5 ஓட்டல்களில் 20 கிலோ சிக்கனை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
25 ஓட்டல்களில் ஆய்வு
கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் கைலாஷ்குமார் அறிவுறுத்தலின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகரன் தலைமையிலான அதிகாரிகள் கடந்த சில நாட்களாக ஓட்டல்களில் சுகாதாரமான இறைச்சி வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறதா? என சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட புதுப்பாளையம், செம்மண்டலம், மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 25-க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகரன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
20 கிலோ சிக்கன் பறிமுதல்
அப்போது 5 ஓட்டல்களில் செயற்கை நிறமூட்டி கலந்த சிக்கன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த 5 ஓட்டல்களில் இருந்த சுமார் 20 கிலோ சிக்கனை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை கீழே கொட்டி அழித்தனர்.
தொடர்ந்து இதுபோன்று செயற்கை நிறமூட்டி கலந்த சிக்கன் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஓட்டல் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.