செங்குன்றம் அருகே நள்ளிரவில் பயங்கரம் 2 வாலிபர்கள் சரமாரியாக வெட்டிக்கொலை
சென்னை செங்குன்றம் அருகே நள்ளிரவில் 2 வாலிபர்கள் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில அனுமதிக்கப்பட்டு உள்ளார்.;
செங்குன்றம்,
சென்னை செங்குன்றத்தை அடுத்த பெருங்காவூர் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீநாத் (வயது 20). இவர், தன்னுடைய நண்பர்களான அதே பகுதி கருணாநிதி தெருவைச் சேர்ந்த விஜய் (26), அஜய் (27) உள்பட 5 பேருடன் சேர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி அளவில் செங்குன்றத்தை அடுத்த விளாங்காடுபாக்கம் கண்ணம்பாளையம் உடற்பயிற்சி கூடம் அருகே அமர்ந்து மது அருந்தி கொண்டும், கஞ்சா புகைத்து கொண்டும் இருந்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் கையில் பட்டாக்கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்தனர். அவர்கள், மதுபோதையில் இருந்த ஸ்ரீநாத் உள்ளிட்ட 6 பேரையும் சுற்றி வளைத்தனர். மர்ம கும்பல் ஆயுதங்களுடன் இருப்பதை கண்டதும் ஸ்ரீநாத்்தின் நண்பர்களில் 3 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
ஸ்ரீநாத், விஜய் மற்றும் அஜய் ஆகிய 3 பேர் மட்டும் அந்த கும்பலிடம் சிக்கிக்கொண்டனர். மர்மகும்பல் 3 பேரையும் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த ஸ்ரீநாத், விஜய் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த அஜய், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், உயிருக்கு போராடிய அஜயை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த இரட்டை கொலை குறித்து செங்குன்றம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆவடி இணை கமிஷனர் விஜயகுமார், செங்குன்றம் காவல் மாவட்ட துணை கமிஷனர் பாலகிருஷ்ணன், செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொலையான 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்
மேலும் இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த இரட்டை கொலை தொடர்பாக கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்த டில்லி(26), மணிகண்டன்(24), ஸ்ரீகாந்த்(26), நரேஷ்(25) ஆகிய 4 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்குள்ள அம்மன் கோவில் திருவிழாவின்போது கொலையான ஸ்ரீநாத் தரப்பினருக்கும், கைதானவர்களுக்கும் இடையே கோஷ்டிமோதல் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் இரவு பெருங்காவூரை சேர்ந்த ஸ்ரீநாத் மற்றும் அவருடைய நண்பர்கள் தங்கள் பகுதியான கண்ணம்பாளையத்துக்கு வந்து மது அருந்துவதை அறிந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த டில்லி உள்பட 6 பேர் பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்து ஸ்ரீநாத், விஜய் இருவரையும் வெட்டிக்கொன்றது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்குன்றம் அருகே நள்ளிரவில் நடைபெற்ற இந்த இரட்டை கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.