மோட்டார் சைக்கிள்களில் இருந்து தவறி விழுந்து 2 வாலிபர்கள் பலி
திருமயம் அருகே வெவ்வேறு விபத்துகளில் மோட்டார் சைக்கிள்களில் இருந்து தவறி விழுந்து 2 வாலிபர்கள் பலியாகினர்.;
வாலிபர் பலி
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே அம்மன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் சதாசிவம் மகன் ராஜ மனோகரன் (வயது 29), ஆண்டியப்பன் மகன் ஆனந்தகுமார் (24). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் அரசம்பட்டியில் இருந்து திருச்சி- காரைக்குடி பைபாஸ் சாலையில் திருமயம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது வீரப்பட்டி விலக்கு ரோடு அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி அருகில் உள்ள பள்ளத்தில் பாய்ந்தது.
இதில் படுகாயமடைந்த ராஜ மனோகரன், ஆனந்தகுமார் ஆகியோரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜ மனோகரன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜ மனோகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாவு
திருமயம் அருகே உள்ள விராச்சிலை வேளார் தெருவை சேர்ந்தவர் சோமன் மகன் கார்த்திக் (38). இவர் மோட்டார் சைக்கிளில் திருமயத்தில் இருந்து திருமயம்- பொன்னமராவதி சாலையில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வி.லட்சுமிபுரம் ரைஸ் மில் அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த கார்த்திக்கை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பனையப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.