முத்துப்பேட்டையை அடுத்த மங்கலூர் கிழக்கு கடற்கரை சாலை மங்கல் ஏரி அருகே சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பெருகவாழ்ந்தான் முனியாண்டி தலைமையில் போலீசார் அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முத்துப்பேட்டை ஆசாத்நகரை சேர்ந்த முகைதீன் மகன் ஹாரூன் (வயது 20), இடும்பாவனம் கீழவாடியக்காடு சர்வமான்யம் பகுதியை சேர்ந்த வேதசுந்தரம் மகன் வினோத் (20) ஆகியோர் என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 1 கிலோ 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.