தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை
தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.;
திருச்சி ஸ்ரீரங்கம் சங்கர் நகரை சேர்ந்தவர் மகன் கனகராஜ். (வயது 52). இவர் துவாக்குடி சிட்கோ தொழிற்பேட்டையில் என்ஜினீயரிங் நிறுவனம் நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் அடைந்ததால் நிறுவனத்தை மூடிவிட்டு, தன்னிடம் வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை கொடுத்து அனுப்பினார். கடந்த 2018-ம் ஆண்டு அவரிடம் வேலை பார்த்த ஸ்ரீரங்கம் கீரைக்கார தெருவை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தனக்கு கூடுதல் பணம் தரவேண்டும், சம்பள பாக்கி உள்ளது என்று கனகராஜ் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது அங்கு நின்றிருந்த கனகராஜின் கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர். திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கில் சாட்சி விசாரணைகள் முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், கொலைமிரட்டல் விடுத்ததற்கும், காரை சேதப்படுத்தியதற்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.500 அபராதம் விதித்து நீதிபதி பாபு தீர்ப்பு கூறினார். அத்துடன் இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும் அவர் உத்தரவிட்டார்.