பூட்டை உடைத்து ஓட்டலில் புகுந்து திருடிய 2 பெண்கள்

சுடிதார் உடையில் முகமூடி அணிந்து வந்து ஓட்டலில் பூட்டை உடைத்து புகுந்து திருடிய 2 பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-01-12 21:09 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி - வேலூர் நெடுஞ்சாலையில் சேவூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஓட்டல் நடத்தி வருபவர் வசந்தகுமார் (வயது 40). இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு சென்று விட்டார். நேற்று அதிகாலையில் காய்கறிகளை வாங்கி வைப்பதற்காக கடைக்கு வந்தார்.

கடையை திறந்து பார்க்கும்போது கல்லாப்பெட்டி அருகே பணம் சிதறி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பின்பக்க இரும்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. எனவே பின்பக்க கதவை உடைத்து, ஓட்டலுக்குள் புகுந்து மர்மநபர்கள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

2 பெண்கள்

அங்கு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சியை பார்த்தபோது, நள்ளிரவு ஒரு மணி அளவில் 2 பெண்கள் சுடிதார் அணிந்த நிலையில் ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு முகமூடி அணிந்தவாறு கல்லா பெட்டி அருகே இருந்த சாவியைக் கொண்டே கல்லாவை திறந்து அதிலிருந்து பணத்தை திருடிய காட்சி பதிவாகியிருந்தது. இதை பார்த்து வசந்தகுமார் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இதுகுறித்து அவர் ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூட்டை உடைத்து திருடும் சம்பவங்களில் ஆண் திருடர்கள் ஈடுபட்டு வந்ததைத்தான் அறிந்திருப்போம். இப்போது பெண்கள் அதுவும் முகமூடி அணிந்து ஓட்டல் பூட்டை உடைத்து திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பெண்களை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அடையாளம் கண்டு கைது செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்