பொன்னேரியில் வீட்டில் பதுக்கிய 2 டன் ரேஷன் அரிசி, துவரம் பருப்பு பறிமுதல்

பொன்னேரி பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்த 2 டன் ரேஷன் அரிசி மற்றும் துவரம் பருப்பு மூட்டைகளை குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.;

Update: 2022-07-11 14:18 GMT

ரேஷன் அரிசி பதுக்கல்

பொன்னேரி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாகவும், அவை ஒருவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் திருவள்ளூர் மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து குற்றப்புலனாய்வு இன்ஸ்பெக்டர் சுந்தராம்பாள், சப்-இன்ஸ்பெக்டர் நந்தினிஉஷா உள்பட போலீசார் சந்தேகத்தின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்து ஒருவரது வீட்டை சோதனையிட்டனர். அப்போது அந்த வீட்டில் 50 கிலோ எடை கொண்ட 40 மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசி மற்றும் 150 கிலோ துவரம் பருப்பு பதுக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒருவர் கைது

இதுதொடர்பாக வீட்டில் இருந்த மதன் (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர், ரேஷன் கடையில் அரிசி, பருப்புகளை சட்டவிரோதமாக விலைக்கு வாங்கி பதுக்கி வைத்ததாக தெரிவித்தார். இதையடுத்து அவரிடமிருந்து 2 டன் ரேஷன் அரிசி மற்றும் 150 கிலோ துவரம் பருப்பு ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், பொன்னேரி அருகில் தச்சூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.மேலும், கைது செய்யப்பட்ட மதனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் இது தொடர்பாக சென்னை வியாசர்பாடியை சேர்ந்த முருகேசன் என்பவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்