மோட்டார் சைக்கிள்கள் விபத்தில் 2 வாலிபர்கள் பலி

Update:2023-03-09 01:33 IST

வெவ்வேறு இடங்களில் நடந்த மோட்டார் சைக்கிள்கள் விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள். ஒருவர் படுகாயம் அடைந்தார். மற்றொரு விபத்தில் கார் மோதி முதியவர் இறந்தார்.

தனியார் நிறுவன ஊழியர்

லால்குடி அருகே உள்ள கீழ வாளாடியை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் நிஷாந்த் (வயது 22). ஐ.டி.ஐ. வரை படித்த இவர் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் பணி நிமித்தமாக கல்லணை சென்ற நிஷாந்த் வேலை முடிந்ததும் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டிருந்தார்.

கல்லணை - திருச்சி சாலையில் கவுத்தரசநல்லூர் அருகே வந்தபோது, அப்பகுதியை சேர்ந்த பாரதிதாசன் (40) என்பவர் நடந்து சென்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக நிஷாந்த் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பாரதிதாசன் மீது மோதியது. இதில் நிஷாந்த் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மோட்டார் சைக்கிள் மோதியதில் பாரதிதாசனும் பலத்த காயம் அடைந்தார். இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு விபத்து

துவரங்குறிச்சி அருகே உள்ள சடவேலாம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னையா (22). இவர் விராலிமலையில் உள்ள தனியார் ஆலையில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சின்னையா லிங்கம்பட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சடவேலாம்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் சின்னையா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதியவர் பலி

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள நங்கவரம் காமராஜர் நகரை சேர்ந்தவர் பெரியசாமி (60). இவர் முத்தரசநல்லூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு நச்சலூர் செல்வதற்காக முத்தரசநல்லூர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது திருச்சியிலிருந்து கரூர் நோக்கி சென்ற கார் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குப்பதிவு செய்து விசாரனண நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்