சங்ககிரி அருகே பரபரப்பு: திருடன் என நினைத்து 2 வாலிபர்களுக்கு அடி-உதை 10 பேர் மீது வழக்கு
சங்ககிரி அருகே திருடன் என நினைத்து 2 வாலிபர்களை கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்து தாக்கிய 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.;
சங்ககிரி,
மோட்டார் சைக்கிளில்...
சேலம் அம்மாபேட்டை எல்லப்பன் தெருவை சேர்ந்தவர் தினேஷ் (வயது 28). இவர் பள்ளிபாளையத்தில் கடந்த 2 மாதங்களாக தங்கி, குமார் என்பவரின் காரை ஓட்டி வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் தினேஷ் தனது நண்பர் மணிகண்டன் (30) என்பவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது அவர் நீ வந்து மோட்டார் சைக்கிளில் என்னை வீட்டுக்கு அழைத்து செல்ல கேட்டுள்ளார். அதற்கு மணிகண்டன் வருவதாக கூறி நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் பள்ளிபாளையத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று அழைத்து வந்தார்.
அப்போது அவர்கள் இருவரும் டாஸ்மாக் கடைக்கு சென்று 4 பீர் பாட்டில்கள் வாங்கி அதில் 2 பீரை குடித்துள்ளனர். பின்னர் 2 பீர் பாட்டில்களுடன் மோட்டார் சைக்கிளில் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
நள்ளிரவு 1.30 மணியளவில் சங்ககிரி அருகே வைகுந்தம் டோல்கேட் பகுதிக்கு வந்தனர். அங்கு அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சாலையோரமாக உள்ள தாபா ஓட்டல் அருகே அமர்ந்து அவர்கள் இருவரும் 2 பாட்டில் பீரை குடித்தனர்.
நாய்கள் குரைத்தன
அதன்பிறகு மணிகண்டன் அங்கேயே படுத்து தூங்கி விட்டார். தினேஷ் அங்குள்ள தென்னந்தோப்புக்கு இயற்கை உபாதையை கழிக்க சென்றார். அங்கு தகரம் தட்டும் சத்தம் கேட்டு செல்போன் விளக்கு வெளிச்சத்தில் பார்த்தார். அங்கு ஆட்டு கொட்டகை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதே நேரத்தில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு அங்கிருந்த வீட்டின் உரிமையாளர் மணி, அவருடைய மகன் கலையரசன்ஆகியோர் வெளியே வந்து பார்த்தனர். மேலும் அவர்கள் யாரடா? என சத்தம் போட தினேஷ் அங்கிருந்து தப்பிஓடி விட்டார். அப்போது அவருடைய செல்போன் கீழே தவறிவிழுந்து விட்டதாக தெரிகிறது.
அதன்பிறகு ஒரு மணிநேரம் கழித்து மீண்டும் தினேஷ் கீழே விழுந்த செல்போனை தேடி சென்றார். மீண்டும் மணி மற்றும் கலையரசன் சத்தம் போட அங்கிருந்து தினேஷ் மீண்டும் தப்பி ஓடி விட்டார். பிறகு அதிகாலை 6 மணிக்கு தினேஷ் தனது நண்பர் மணிகண்டனிடம் நடந்ததை கூறி உள்ளார்.
வா இருவரும் போய் செல்போனை வாங்கி வருவோம் எனக்கூறி இருவரும் மணி வீட்டிற்கு சென்று செல்போனை கேட்டனர்.
ஆட்டை திருட வந்தவர்கள்?
அதற்கு மணி, கலையரசன் நீங்கள் தாண்டா எங்க ஆட்டை திருட வந்ததவர்கள் எனக்கூறி நைலான் கயிற்றால் இருவரையும் கைகளை கட்டி வைத்து கயிறு, பெல்ட், இரும்பு பட்டை ஆகியவற்றை கொண்டு இருவரையும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. பிறகு அக்கம் பக்கத்தை சேர்ந்த 10 பேர் அங்கு வந்து பெல்ட், கயிற்றால் அவர்கள் இருவரையும் அடித்து உதைத்தனர்.
அதன்பிறகு சங்ககிரி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது, தினேஷ், மணிகண்டனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் சங்ககிரி அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையடுத்து திருடன் என்ற சந்தேகத்தில் வாலிபர்களை அடித்து உதைத்த கலையரசன் உள்பட 10 பேர் மீது சங்ககிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாந்தா மணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மணி கொடுத்த புகாரின் பேரில் தினேஷ் மற்றும் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் சங்ககிரி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.