பேரம்பாக்கம் அருகே ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு

பேரம்பாக்கம் அருகே ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர்.;

Update:2023-05-30 00:18 IST

பேரம்பாக்கம்,

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தை அடுத்த வயலூர் கிராமம் குளக்கரை தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன்கள் பிரசன்னா (வயது 17), தினேஷ் (15). இவர்களில் பிரசன்னா பிளஸ்-2 முடித்துள்ளார். தினேஷ் 9-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 10-ம் வகுப்பில் சேர உள்ளார். வயலூர் ஸ்டாலின் நகர் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல் ( 16) 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை வெற்றிவேல், தினேஷ், பிரசன்னா ஆகியோர் நண்பர்களுடன் ஏரியில் குளிக்கச்சென்றனர். ஏரியில் குளித்து கொண்டு இருந்தபோது வெற்றிவேல், தினேஷ் அவரது சகோதரர் பிரசன்னா ஆகியோர் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றனர்.

சாவு

அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் ஏரியில் மூழ்கினார்கள். இதை பார்த்த உடன் குளித்து கொண்டிருந்தவர்கள் 3 பேரையும் காப்பாற்ற முயன்றனர். இருப்பினும் அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் 3 பேரையும் மீட்க முடியவில்லை. இதனால் அவர்கள் அலறி கூச்சலிட்டனர். அவர்களின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து ஏரியில் மூழ்கிய பிரசன்னா, தினேஷ், வெற்றிவேல் ஆகியோரை மீட்டனர். அவர்களை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே வெற்றிவேல், தினேஷ் ஆகியோர் பரிதாபமாக இறந்து போனார்கள். பிரசன்னா திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மப்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கோடை விடுமுறையை கழிப்பதற்காக வயலூர் ஏரியில் குளிக்க சென்ற போது பள்ளி மாணவர்கள் ஏரியில் மூழ்கி இறந்த சம்பவம் வயலூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்