2 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பயங்கர மோதல்
2 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பயங்கர மோதல்
திருப்பூர்
திருப்பூர் ரெயில் நிலையம் முன் கற்களாலும், கட்டையாலும் மாணவர்கள் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
மாணவர்கள் மோதல்
திருப்பூர் ரெயில் நிலையம் முன்புறம் குமரன் சிலை அருகே நேற்று மாலை 6 மணி அளவில் 2 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் ஒருவரையொருவர் கற்களால் தாக்கத் தொடங்கினார்கள். ரெயில் நிலையம் அருகே உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஒரு தரப்பாகவும், குமார் நகரில் உள்ள ஒரு பள்ளி மாணவர்கள் மற்றொரு தரப்பாகவும் கூடி மோதினார்கள்.
ரோட்டில் ஒருவரையொருவர் கற்களை எறிந்து துரத்தி, துரத்தி தாக்கினார்கள். ரோட்டோரம் கிடந்த மரக்கட்டைகளை எடுத்து தாக்கினார்கள். இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள் அச்சமடைந்து ஓட்டம்பிடித்தனர். ஒரு கட்டத்தில் இதை கவனித்த பொதுமக்கள் மாணவர்களை தடுக்க முயன்றனர். அவர்களையும் மாணவர்கள் தாக்க தொடங்கினார்கள். பின்னர் ஆட்டோ டிரைவர்கள், ரோட்டில் சென்ற இளைஞர்கள் அனைவரும் சேர்ந்து கையில் சிக்கிய மாணவர்களை மடக்கி பிடித்து வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் எச்சரிக்கை
சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து அவர்களை எச்சரித்து கண்டித்து, அறிவுரை கூறி போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பெரும்பரபரப்பாக காணப்பட்டது. பொது இடங்களில் பள்ளி மாணவர்கள் இவ்வாறு தாக்கிக்கொள்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போலீசார் இதுபோன்று மாணவர்கள் கூடும் இடங்களில் காலை, மாலை நேரத்தில் ரோந்துப்பணி மேற்கொள்வது அவசியமாகும்.