நாட்டு துப்பாக்கிக்கான வெடி பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது

நாட்டு துப்பாக்கிக்கான வெடி பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-07-03 19:21 GMT

வெடி பொருட்கள்

பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் குகனேஷ் உத்தரவின்படி, பெரம்பலூர் வனச்சரக அலுவலர் பழனிகுமரன் தலைமையில், வனத்துறையினர் நேற்று முன்தினம் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை 2.30 மணியளவில் பெரம்பலூர்-துறையூர் சாலையில் மட்டப்பாறை பஸ் நிறுத்தம் அருகே சந்தேகம்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் திருச்சி மாவட்டம், துறையூர் சிலோன் காலனி, திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் (வயது 50), துறையூர் அம்பலக்காரர் தெருவை சேர்ந்த ஜெயராமன் (63) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த கைப்பையை வனத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது அதில் நாட்டு துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் வெடி பொருட்களான 100 கிராம் எடையுள்ள பால்ரஸ் குண்டுகள் மற்றும் 50 கிராம் எடையுள்ள கரி மருந்து ஆகியவை டப்பாக்களில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கைது

இதையடுத்து அவர்களை வனத்துறையினர் நேற்று மதியம் பாடாலூர் போலீசில் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வனவர் பிரதீப்குமார் கொடுத்த புகாரின்பேரில், பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து கணேசன், ஜெயராமன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்