2 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
குத்தாலம் அருகே பெண்ணை தாக்கி காரை சேதப்படுத்திய வழக்கில் 2 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
குத்தாலம் அருகே பெண்ணை தாக்கி காரை சேதப்படுத்திய வழக்கில் 2 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தகராறு
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள கோனேரிராஜபுரம் அக்ரஹார தெருவை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி பத்மாவதி. இவரிடம் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 10-ந் தேதி அதே தெருவை சேர்ந்த அஞ்சம்மாள் (வயது 63), அவரது கணவர் உத்திராபதி, மகன் வினோத் (38), உறவினர் ராமமூர்த்தி (53) ஆகிய 4 பேரும் அஞ்சம்மாள் வளர்த்து வந்த 2 ஆடுகளை சரவணன் குடும்பத்தினர் காரை ஏற்றி கொன்று விட்டதாக கூறி தகராறில் ஈடுபட்டனர்.
வழக்குப்பதிவு
அப்போது அஞ்சம்மாள், உத்திராபதி ஆகிய இருவரும் பத்மாவதியை தகாத வார்த்தைகளால் திட்டினர். மேலும் வினோத், ராமமூர்த்தி ஆகிய 2 பேரும் பத்மாவதியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததுடன், அவரது வீட்டில் இருந்த காரை உடைத்து சேதப்படுத்தினர். இதுகுறித்து பத்மாவதி அளித்த புகாரின் பேரில் பாலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை மயிலாடுதுறை கோர்ட்டில் நடந்தது. வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்த போது உத்திராபதி உயிரிழந்தார்.
தீர்ப்பு
நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. இதில் பத்மாவதியை தகாத வார்த்தையால் திட்டிய அஞ்சமாளுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பத்மாவதியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததுடன், காரை உடைத்து சேதப்படுத்திய வினோத், ராமமூர்த்தி ஆகிய இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.2ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக தலா ஒரு மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என மாவட்ட அமர்வு நீதிபதி இளங்கோ தீர்ப்பு கூறினாா்.இந்த வழக்கில் அரசு வக்கீல் ராம.சேயோன் பத்மாவதி தரப்பில் வாதாடினார்.