கள்ளக்காதலி உள்பட 2 பேர் சிறையில் அடைப்பு
கோத்தகிரியில் பூசாரியை அடித்துக்கொன்ற கள்ளக்காதலி உள்பட 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை 6 மணி நேரத்தில் பிடித்த போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.;
கோத்தகிரியில் பூசாரியை அடித்துக்கொன்ற கள்ளக்காதலி உள்பட 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை 6 மணி நேரத்தில் பிடித்த போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பிணமாக கிடந்த பூசாரி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ரோஸ் காட்டேஜ் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 44). இவர் கோத்தகிரி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் மாரிமுத்து நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் கோத்தகிரி அருகே உள்ள கோவில்மேடு பகுதியில் உடலில் பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார். இதை அறிந்த கோத்தகிரி போலீசார் விரைந்து வந்து, அவரது உடலை மீட்டு, விசாரணை மேற்கொண்டனர்.
கிடுக்கிப்பிடி விசாரணை
அப்போது அவர் உயிரிழந்து கிடந்த இடத்தின் அருகில் உள்ள ஒரு வீட்டின் சுவரில் ரத்தக்கறை இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் அந்த வீடு பூட்டி கிடந்தது. உடனே அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது, அந்த வீட்டில் கணவரை பிரிந்த தனலட்சுமி(25) என்பவர் வசித்து வந்தது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் தேடினர். அவரது செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்தபோது, மேட்டுப்பாளையத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே மதியம் 2 மணிக்கு அங்கு போலீசார் சென்றனர். அப்போது அவர், கோத்தகிரி பாண்டியன் நகரை சேர்ந்த உதயகுமார்(37) என்பவருடன் நிற்பது தெரியவந்தது. உடனே அவர்களை போலீசார் பிடித்து, கோத்தகிரி அழைத்து வந்து, கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
கள்ளக்காதல்
அப்போது தனலட்சுமி திடுக்கிடும் பல்வேறு தகவல்களை வெளியிட்டார். அதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
தனலட்சுமிக்கு, சேலத்தை சேர்ந்த முரளி என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து 2 குழந்தைகளை பெற்றோரிடம் விட்டுவிட்டு கோவில்மேடு பகுதியில் வசித்து வந்தார். பின்னர் 2-வதாக தர்மராஜ் என்பவரை திருமணம் செய்தார். அவர் மூலம் தனலட்சுமிக்கு 3 வயதில் குழந்தை உள்ளது.
இதற்கிடையில் அவருக்கு, பூசாரி மாரிமுத்துவுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. அதோடு உதயகுமாருடனும் தொடர்பில் இருந்தார். கடந்த 23-ந் தேதி இரவு 9 மணிக்கு தனலட்சுமி வீட்டுக்கு மாரிமுத்து வந்தார். அவரிடம், இனி உதயகுமாருடன் சேர்ந்து வாழ போகிறேன், நீங்கள் இனி இங்கு வர வேண்டாம் என்று தனலட்சுமி கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து, தனலட்சுமியை சரமாரியாக தாக்கினார்.
இதற்கிடையில் 9.45 மணிக்கு உதயகுமார், அங்கு வந்தார். அவர், தனலட்சுமியை தாக்குவதை கண்டு ஆத்திரம் அடைந்து மாரிமுத்துவை தாக்கினார். பின்னர் அவரோடு தனலட்சுமியும் சேர்ந்து மாரிமுத்துவை தாக்கினார்.
காட்டிக்கொடுத்த ரத்தக்கறை
அப்ேபாது இருவரும் சேர்ந்து மாரிமுத்துவின் தலையை சுவரில் மோத செய்தனர். மேலும் அவரை வெளியே இழுத்து வந்து, சுமார் 7 அடி பள்ளத்தில் உள்ள கான்கிரீட் படிக்கட்டில் தள்ளிவிட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் அவர்கள் ஆடைகளை மாற்றிக்கொண்டு வீட்டை பூட்டிவிட்டு மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு சென்று விட்டனர். ஆனாலும், வீட்டின் சுவரில் ஒட்டியிருந்த ரத்தக்கறை அவர்களை காட்டி கொடுத்தது.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் 6 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்த போலீசாரை உயர் அதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டினார்கள்.