இணைப்பதிவாளருக்கு கொலை மிரட்டல்: ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட 2 பேர் கைது
கள்ளக்குறிச்சியில் இணைப்பதிவாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி ஏமப்பேர் ராமச்சந்திரா நகரை சேர்ந்தவர் வீரமணி (வயது 53)ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவரும், அதே பகுதியை சேர்ந்த சிவராமன் மகன் ராஜா (39) என்பவரும் கள்ளக்குறிச்சி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த இணைப்பதிவாளர் சிவகுமார் என்பவரிடம் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இணைப்பதிவாளரை அரசு பணி செய்யவிடாமல் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து இணைப்பதிவாளர் சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணி, ராஜா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.