தொழிலாளி வீட்டில் திருடிய பெண் உள்பட 2 பேருக்கு தர்மஅடி
தொழிலாளி வீட்டில் திருடிய பெண் உள்பட 2 பேருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;
திட்டக்குடி,
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வதிஷ்டபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்குபாலன். தொழிலாளி. இவரது மனைவி அன்பரசி (வயது 28). நேற்று முன்தினம் மாலை இவர் தனது தாய் காசோலை என்பவருடன் திட்டக்குடிக்கு மளிகை பொருட்கள் வாங்க சென்றார்.
பின்னர் இரவு, 8 மணிக்கு வீட்டுக்கு வந்தனர். அப்போது, அவரது வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பித்தளை பாத்திரங்களை திருடிக்கொண்டு ஒரு பெண்ணும், வாலிபரும் வெளியே வந்தனர்.
பொதுமக்கள் தர்மஅடி
இதை பார்த்த அன்பரசி திருடன், திருடன் என்று கூச்சலிட்டார். உடனே அவர்கள் தப்பி ஓட முயன்றனர். அதற்குள் அந்த பகுதி பொதுமக்கள் திரண்டு வந்த அவர்கள் இருவரையும் பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த திட்டக்குடி போலீசார் விரைந்து சென்று, 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா அத்தியூர் கிராமத்தை சேர்ந்த ராஜலிங்கம் மகன் பெரியசாமி (வயது 30), காந்திநகர் செல்வராசு மனைவி மஞ்சுளா(35) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து அன்பரசி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெரியசாமியை கைது செய்தனர். மேலும், மஞ்சுளாவுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதால், அவர் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.