மோட்டார் சைக்கிள் மோதி கட்டிட தொழிலாளி உள்பட 2 பேர் பலி
திருச்சியில் நடந்து சென்றவர்கள் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் கட்டிட தொழிலாளி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கட்டிட தொழிலாளியின் நண்பர் படுகாயம் அடைந்தார்.;
திருச்சியில் நடந்து சென்றவர்கள் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் கட்டிட தொழிலாளி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கட்டிட தொழிலாளியின் நண்பர் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
கட்டிட தொழிலாளர்கள்
திருச்சி கே.கே.நகர் சாத்தனூர் கோல்டன் அவென்யு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் ஜெயபால் (வயது 19). கட்டிட தொழிலாளி. இவருடைய நண்பர்கள் இச்சிமலைபட்டி முஸ்லிம் தெருவை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் பழனிசாமி (19), எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த முருகன் மகன் சக்திவேல் (19). இவர்களும் கட்டிட தொழிலாளர்கள்.
நேற்று முன்தினம் இரவு ஜெயபால், பழனிசாமி, சக்திவேல் ஆகிய 3 பேரும் சாப்பிடுவதற்காக ஓலையூர் ரிங்ரோடு பகுதிக்கு சென்றனர். அங்கு சாப்பிட்டு முடித்துவிட்டு இரவு 10.15 மணி அளவில் ஜெயபால், பழனிசாமி, சக்திவேல் ஆகிய 3 பேரும் திருச்சி ஓலையூர் ரிங்ரோட்டில் இருந்து பஞ்சப்பூர் ரோடு நோக்கி பாரிநகர் சந்திப்பு அருகே நடந்து சென்றுகொண்டிருந்தனர்.
2 பேர் பரிதாப சாவு
அப்போது அந்த வழியாக அவர்களுக்கு பின்னால் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஜெயபால், பழனிசாமி ஆகியோர் மீது மோதியது. இதில் ஜெயபாலுக்கும், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபருக்கும் தலையிலும், பழனிசாமிக்கு இடது காலிலும் படுகாயம் ஏற்பட்டது. அந்தவழியாக வந்தவர்கள் 3 பேரையும் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் ஜெயபால் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பழனிசாமி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் சுயநினைவின்றி மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் நேற்று மதியம் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து விட்டார்.
போலீசார் விசாரணை
இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்து விபத்தில் சிக்கி இறந்தவர் பெயர் ஜான்விக்டர் என்றும், அரியலூரை சேர்ந்தவர் என மட்டுமே தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரின் உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் திருச்சி தெற்கு குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.