மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய சிறுவன் உள்பட 2 பேர் கைது
கீழ்வேளூர் அருகே மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய சிறுவன் உள்பட 2 பேர் கைது;
சிக்கல்:
நாகை மாவட்டத்தில் சாராய கடத்தலை தடுக்க போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையொட்டி நாகூர்- ஆழியூர் சாலையில் உள்ள பெருங்கடம்பனூர் தனியார் தொழிற்பயிற்சி நிலையம் அருகே கீழ்வேளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அக்பர் அலி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் நாகை செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த வில்லியம்ஸ் மகன் ஜெல்சன் (வயது20) மற்றும் 18 வயது சிறுவன் என்பதும், இவர்கள் 2 பேரும் காரைக்கால் வாஞ்சூர் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் போலீசார் பறிமுதல் செய்யப்பட்டது.