வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் சாவு
காவேரிப்பட்டணம், பேரிகையில் வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் இறந்தனர்.;
காவேரிப்பட்டணம்
கேரள வாலிபர்
கேரளா மாநிலம் எல்லூர் தாலுகா கும்பனம் பகுதியை சேர்ந்தவர் ஷாகுல் அமீது (வயது 28). இவர் மோட்டார்சைக்கிளில் காவேரிப்பட்டணம் அருகே சவுளூர் பாலம் அருகில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஷாகுல் அமீது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூர்
பெங்களூரு எஸ்.வி.பாளையா பகுதியை சேர்ந்தவர் லட்சுமி நாராயணப்பா. இவரது மகன் மஞ்சுநாத் (20). இவர் கடந்த 10.4.2022 அன்று மோட்டார்சைக்கிளில் பேரிகை அருகே தீர்த்தம் சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள், கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த மஞ்சுநாத், சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பேரிகை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.